செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்... திடீரென சீனுக்கு வந்த பொன்முடி - நடப்பது என்ன?

Senthil Balaji Latest Update: அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட நிலையில், இலக்கா மாற்று பரிந்துரைக்கு ஆளுநர் ஆர்.என். ரவி மறுப்பு தெரிவித்தது குறித்து அமைச்சர் பொன்முடி செய்தியாளரை சந்தித்தார். 

Written by - Sudharsan G | Last Updated : Jun 15, 2023, 10:33 PM IST
  • 'Misleading and Incorrect' என கூறி இலக்கா மாற்று பரிந்துரைக்கு ஆளுநர் மறுப்பு.
  • மே 31ஆம் தேதியே செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்க ஆளுநர் கடிதம்.
  • இரு கடிதங்களுக்கும் முதலமைச்சர் தரப்பில் இருந்து உடனடியாக பதில் கடிதம் அளிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்... திடீரென சீனுக்கு வந்த பொன்முடி - நடப்பது என்ன? title=

Senthil Balaji Latest Update: அமைச்சர் செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் 10 நிமிடங்களில் காவேரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவருக்கு அங்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. அவருக்கு இதய ரத்த குழாய்களில் மூன்று அடைப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இது ஒருபுறம் இருக்க, மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இலக்கா மாற்ற பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்த ஆளுநரின் முடிவு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டது. இதனை அமைச்சர் பொன்முடி உறுதிசெய்தார். 

Misleading and Incorrect

அதுமட்டுமின்றி, தமிழ்நாடு அரசின் இலக்கா மாற்றும் பரிந்துரையில் சொல்லப்பட்ட காரணங்கள் 'Misleading and Incorrect' என கடிதம் எழுதி, பரிந்துரைக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் பொன்முடி கூறினார். அதற்கும் பதில் கடிதம் அளிக்கப்பட்டதாகவும் பொன்முடி தெரிவித்தார்.

மே 31ஆம் தேதியே ஆளுநர் கடிதம்

உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி இன்றிரவு செய்தியாளர்களை சந்தித்தார். அதில்,"அமைச்சர்‌ செந்தில் பாலாஜியை நீக்க வேண்டும்‌ என ஆளுநர்‌ ஆர்.என். ரவி, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கடந்த மே 31ஆம் தேதி அன்று ஒரு கடிதம்‌ எழுதியிருந்தார்‌.

முதலமைச்சர் பதில் கடிதம்

அதில், இந்த கடிதம்‌ கிடைக்கப்‌ பெற்ற அடுத்த நாளே முதலமைச்சர்‌ ஸ்டாலின் ஜூன் 1ஆம் தேதி அன்று ஆளுநர்‌ இது குறித்த தெளிவான சட்டரீதியான காரணங்களை விளக்கிக்‌ கூறி பதில்‌ கடிதம்‌ அனுப்பி வைத்திருந்தார்‌. அந்த கடிதத்தில்‌, ஆளுநரின்‌ கடிதம்‌ அரசியல்‌ சட்டத்திற்கு எதிரானது. என்பதை சுட்டிக்காட்டியும்‌ மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சருக்குத்தான்‌ அமைச்சரை நீக்கவோ, நியமிக்கவோ பரிந்துரை செய்யும்‌ அதிகாரம்‌ இருக்கிறது என்பதையும்‌- இது குறித்து பரிந்துரைகளை அளிக்கும்‌ ஆளுநருக்கு அரசியல்‌ சாசனத்தின்படி எவ்வித அதிகாரமும்‌ இல்லை என்பதையும்‌ தெளிவாக - அரசியல்‌ சட்டப்பிரிவு 184- ஐ மேற்கோள்‌ காட்டி எழுதியிருக்கிறார்‌. 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜி இலக்கா மாற்றம்... அரசுக்கு மீண்டும் கொடைச்சல் கொடுக்கிறாரா ஆளுநர்?

அமித்ஷா பதவி விலகினாரா?

மேலும், அக்கடிதத்தில்‌ ஒரு மாநில அமைச்சரவையில்‌ யார்‌ அமைச்சராக இருக்க வேண்டும்‌, இருக்கக் கூடாது என்பதை முடிவு செய்யும்‌ அதிகாரம்‌ ஆளுநருக்கு இல்லை என்பதை முதலமைச்சர்‌ ஆளுநருக்கு அடிப்படை அரசியல்‌ பாடமே எடுத்திருக்கிறார்‌. இன்னும்‌ சொல்வதென்றால்‌ தற்போதைய ஒன்றிய உள்துறை அமைச்சர்‌ அமித்ஷா‌ குஜராத்‌ உள்துறை அமைச்சராக இருந்த போது, வழக்குகள்‌ விசாரணையில்‌ இருந்த நிலையில்‌ எப்படி பதவியில்‌ தொடர்ந்தார்கள்‌ என்பதைக்‌ கூட உதாரணமாக சுட்டிக்காட்டியிருந்தார்‌.

'ஆளுநர் கடிதம் மட்டும் லீக்... ஏன்?'

அக்கடிதத்திலேயே, அமைச்சர்‌ செந்தில்பாலாஜி விஷயத்தில்‌ கடிதம்‌ எழுதும் ஆளுநர்‌ அவர்கள்‌ அதிமுக முன்னாள்‌ அமைச்சர்கள்‌ மீது ஊழல்‌ வழக்குத்‌ தொடர கோரப்பட்ட அனுமதியை அளிக்காமல்‌ ஏன்‌ கோப்புகளை கிடப்பில்‌ போட்டு வைத்திருக்கிறார்‌ என்றும்‌ கேள்வி எழுப்பியிருந்தார்‌. அதற்கு எல்லாம்‌ எந்த பதிலையும்‌ கூற ஆளுநருக்கு திராணி இல்லை போலும்‌. அதை ஏனோ மறந்துவிட்டு முதலமைச்சர்‌‌ அனுப்பிய ஜூன் 1ஆம் தேதி நாளிட்ட பதில்‌ கடிதத்தினை வசதியாக மறைத்து விட்டு, தான்‌ முதலமைச்சருக்கு எழுதிய கடிதத்தை மட்டும்‌ லீக்‌ செய்திருப்பது அற்பத்தனமான அரசியல்‌ என்றே கருத வேண்டியதிருக்கிறது.

தமிழ்நாடு அரசு பரிந்துரை

அமைச்சர்‌ செந்தில் பாலாஜி அவர்களின்‌ உடல்நிலையை கருத்தில்‌ கொண்டு, அரசு பணிகள்‌ தொடர்ந்து தொய்வின்றி நடைபெற வேண்டும்‌ என்ற நோக்கத்தோடு அமைச்சர்‌ செந்தில் பாலாஜி கவனித்து வந்த பொறுப்புகளை அமைச்சர்கள்‌ தங்கம்‌ தென்னரசு, முத்துச்சாமி ஆகியோருக்கு மாற்றி வழங்கப்‌ பரிந்துரைத்து முதலமைச்சர்‌ இன்று மதியம்‌ கடிதம்‌ எழுதியிருந்தார்கள்‌.

சரியான காரணம் கூறுங்கள்

இந்திய அரசியல்‌ அமைப்புச்‌ சட்டத்தின்படி அமைச்சர்களின்‌ பொறுப்புகளை மாற்றி அமைக்கும்‌ அதிகாரம்‌ முதலமைச்சருக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள நிலையில்‌, தேவையற்ற வகையில்‌ அமலாக்கத்துறை, அமைச்சர்‌ செந்தில்பாலாஜி குறித்து விசாரித்து வருவதை சுட்டிக்காட்டி சரியான காரணத்தை
மேற்கோள்‌ காட்டி கடிதம்‌ அனுப்புமாறு ஆளுநர்‌ கேட்டிருக்கிறார். இது மாநில அரசின்‌ நிர்வாகத்தில்‌ ஆளுநர்‌ தலையிடுவதாகவும்‌, அரசியல்‌ சட்டத்திற்கு புறம்பானதாகவும்‌ நாங்கள்‌ பார்க்கிறோம்‌.

சட்டப்படி உரிமையும் இல்லை

எப்படி அமைச்சர்களை நியமிப்பதிலும்‌, நீக்குவதிலும்‌ முதலமைச்சரின்‌ பரிந்துரைப்படி ஆளுநர்‌ செயல்பட வேண்டுமோ- அதே போல்தான்‌ இலாகா மாற்றுவதிலும்‌ செயல்பட வேண்டும்‌. ஒரு அமைச்சரின்‌ இலாகாவை ஏன்‌ முதலமைச்சர்‌ மாற்றுகிறார்‌ என்று காரணம்‌ கேட்க ஆளுநருக்கு அதிகாரமும்‌ இல்லை. அரசியல்‌ சட்டப்படி உரிமையும்‌ இல்லை. மேலும்‌ அமைச்சர்‌ ஒருவர்‌ விசாரணையை சந்திப்பது அவரது அமைச்சர்‌ பொறுப்புக்கான தகுதியை எந்த வகையிலும்‌ பாதிக்காது என்ற நிலையில்‌, அதனை ஆளுநர் சுட்டிக்காட்டி இருப்பது தேவையற்றது.

உடனே பதில் கடிதம்

இவற்றை கருத்தில்‌ கொண்டு, ஆளுநரின்‌ கடிதத்திற்கு உடனடியாக இன்று பதில்‌ அனுப்பி வைக்கப்படுகிறது. அதில்‌ அவரின்‌ முந்தைய கடிதத்திற்கு பதில்‌ அளிக்கப்பட்ட விவரத்தையும்‌, இன்றைய கடிதத்திற்கு தெளிவான சட்ட விவரங்களையும்‌ எடுத்துக்‌ கூறி தான்‌ ஏற்கனவே அளித்த பரிந்துரையை ஏற்று
அதற்கு உடனடியாக ஒப்புதல்‌ அளிக்க முதலமைச்சர்‌‌ கேட்டுக்‌ கொண்டுள்ளார்கள்‌.

அரசியல்‌ சட்டப்படி பதவிப்‌ பிரமாணம்‌ செய்து கொண்டு, அரசியல்‌ சட்டத்திற்கு விசுவாசமாக இருக்க வேண்டிய ஆளுநர்‌ இப்படி அரசியல்‌ சட்டத்திற்கு விசுவாசமாக இல்லாமல்‌ இருக்கிறார்‌. மக்களால்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின்‌ மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும்‌ நடவடிக்கையே தொடர்ந்து ஆளுநர்‌ மேற்கொள்வது வேதனைக்குரியது, கண்டனத்திற்குரியது" என்றார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கும் திட்டம் நிறைவேறுமா - நாளை உத்தரவு வெளியாகும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News