Coimbatore Latest Updates: தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளுக்குமான தேர்தல் வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற இருக்கிறது. விளவங்கோடு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தலும் நாளை நடைபெறுகிறது. 18வது மக்களவை தேர்தலில் ஆளும் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி, எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணி தேசிய அளவில் ஆட்சியை பிடிக்க கடும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி, தேசிய ஜனநாயக கூட்டணி மட்டுமின்றி அதிமுக கூட்டணி என மும்முனை போட்டியாக உள்ளது. நாம் தமிழர் கட்சியும் சில இடங்களில் வாக்குகளை குவிக்கலாம் என அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேர்தல் பரப்புரை நேற்று மாலையோடு நிறைவடைந்த நிலையில், தேர்தல் நடத்தும் அதிகாரிகள் வாக்குப்பதிவுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதே வேளையில் மக்களும் தங்களுக்கு பிடித்த கட்சிகளுக்கு வாக்களிக்க ஆர்வத்துடன் உள்ளனர். ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தல் வாக்குப்பதிவில் நட்சத்திர வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளும் அதிக கவனம் பெறும்.
நட்சத்திர தொகுதிகள்
குறிப்பாக, தென் சென்னை, தர்மபுரி, விருதுநகர், நீலகிரி, கோவை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி தொகுதிகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் போட்டியிடுகிறார்கள் எனலாம். தென் சென்னையில் திமுக சார்பில் தமிழச்சி தங்கபாண்டியன், பாஜகவின் தமிழிசை சௌந்திரராஜன், அதிமுக தரப்பில் முன்னாள் எம்.பி., ஜெயவர்தன் (முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மகன்) உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
மேலும் படிக்க | தேர்தல் 2024: கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி வரலாறு
அதேபோல், தர்மபுரியில் அன்புமணி ராமதாஸின் மனைவி சௌமியா, நீலகிரியில் திமுகவின் ஆ.ராசா, பாஜகவின் எல்.முருகன்; விருதுநகரில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூர், பாஜகவின் ராதிகா சரத்குமார், தேமுதிகவில் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன்; திருநெல்வேலியில் பாஜகவின் நயினார் நாகேந்திரன்; தூத்துக்குடியில் திமுகவின் கனிமொழி; கன்னியாகுமரியில் பாஜகவின் பொன். ராதாகிருஷ்ணன், காங்கிரஸின் விஜய் வசந்த் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.
கோவை தொகுதி...
இவை அனைத்தையும் விட பெரும் எதிர்பார்ப்பில் இருப்பது தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிடும் கோவை தொகுதிதான். அங்கு திமுக சார்பில் கணபதி ராஜ்குமார், அதிமுகவின் சிங்கை ராமச்சந்திரன் உள்ளிட்டோர் அண்ணாமலைக்கு கடும் போட்டி அளிப்பார்கள் என கூறப்படுவதால் அங்கு வெற்றி வாய்ப்பு யாருக்கு என பெரும்பாலானோர் எதிர்பார்ப்பில் உள்ளனர். அந்த வகையில் அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்பதால் பாஜக தொண்டர் மேற்கொண்ட விபரீத செயலை இங்கு காணலாம்.
பாஜக பிரமுகரின் பிரச்சாரம்
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே ஆண்டாள், முள்ளிபள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துறை ராமலிங்கம். இவர் கடலூர் மாவட்டம் பாரதிய ஜனதா கட்சி துணைத் தலைவராக உள்ளார். கோவை நாடாளுமன்ற தொகுதியில் மாநிலத் தலைவர் அண்ணாமலை போட்டியிடுவதால் அவர் ஆதரவு திரட்ட 10 நாட்கள் முன்பு கோவை வந்தார்.
பொதுமக்களிடம் பிரச்சாரம் செய்தார். நேற்று மாலை 5 மணி அளவில் இவர் பிரச்சாரத்தை முடித்தார். அப்பொழுது அவர் கோவை பகுதியில் அண்ணாமலைதான் வெற்றி பெற வேண்டும் என்று கூறியவாறு கத்தியை எடுத்து இடது கை ஆள்காட்டி விரலை திடீரென துண்டித்துக் கொண்டார்.
வேதனையில் செய்த காரியம்
இதை பார்த்து அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு கோவை அவிநாசி சாலையில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். இது குறித்து துறையூர் ராமலிங்கம் கூறும் போது,"நான் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக பாரதிய ஜனதா கட்சியில் உள்ளேன். 10 நாட்களுக்கு முன்பு கோவை வந்து அண்ணாமலைக்கு ஆதரவு தெரிவித்து பிரச்சாரம் செய்தேன்.
அருகில் இருந்தவர்கள் அவர் தோல்வியை சந்திப்பார் என்று கூறினர். இது எனக்கு வேதனையை கொடுத்தது. எனவே அவர் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எனது விரலை வெட்டிக் கொண்டேன்" என்றார். அண்ணாமலை வெற்றி பெற வேண்டும் என்று பாரதிய ஜனதா பிரமுகர் கைவிரலை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ