Tirupattur Cheetah Attack: திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாமநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சிறுத்தையை தேடி வந்தனர். அப்போது, அந்த வீட்டில் இருந்து சிறுத்தை அருகே உள்ள மேரி ஹிமாகுலேட் பள்ளி வளாகத்தில் தாவியது.
அப்போது அங்கிருந்த வாட்ச்மேன் கோபால் என்பவரின் தலையில் சிறுத்தை தாக்கியது. பின்னர் அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பின்னர் சிறுத்தை அந்த பள்ளியில் இருந்து திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு ஈத்கா மைதானம் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான கார் ஷெட்டில் தஞ்சம் புகுந்துள்ளதாக கூறப்படுகிறது.
மாவட்ட வன அதிகாரி தகவல்
இதனை பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் திருப்பத்தூர் நகர முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு பொதுமக்கள் பெரும் பீதியில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மாவட்ட வன அதிகாரி மகேந்திரன் பேசுகையில், தற்போது சூழல் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சிறுத்தை இரு வீடுகளுக்கு நடுவே உள்ள காலிமனையில் பதுங்கியிருப்பதாகவும் அதனை சுற்றி Wired Nets போடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், விலங்குகள் நல மருத்துவர் சம்பவ இடத்திற்கு வந்த பின்னர் சிறுத்தையை மயக்க மருந்து கொடுத்து பிடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தற்போது சிறுத்தையை பிடிக்க 5 அணிகளில் தலா 10 பேர் என 50 பேர் இருப்பதாகவும், அடுத்து 5 அணிகள் என 50 பேர் சம்பவ இடத்திற்கு வந்துகொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தார். மேலும் அருகாமையில் உள்ள பொதுமக்கள் வீட்டின் உள்ள பத்திரமாக இருக்கும்படி வேண்டுகோளும் விடுத்தார்.
மேலும் படிக்க | கரூரில் பெட்ரோல் பங்கில் அட்டகாசம் செய்த போதை இளைஞர்கள்! பகீர் சம்பவம்!
மயிலாடுதுறை சம்பவம்
திருப்பத்தூர் பகுதியில் இப்போது புகுந்ததை போன்று, கடந்த ஏப்ரல் மாதம் மயிலாடுதுறையில் சிறுத்தை புகுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மயிலாடுதுறையில் கடந்த இரண்டாம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டு சிறுத்தையின் புகைப்படத்தை வனத்துறையினர் வெளியிட்டனர். தொடர்ந்து, 22 கிலோமீட்டர் சிறுத்தை இடம்பெயர்ந்து மயிலாடுதுறை மாவட்ட எல்லையான குத்தாலம் தாலுக்கா காஞ்சிவாய் மற்றும் கருப்பூர் பகுதிகளில் நடமாடியது.
சிறுத்தையின் கால் தடம் மற்றும் சிறுத்தையின் எச்சம் கண்டறியப்பட்டது. அந்த பகுதியில் சிறுத்தை தென்படாததை அடுத்து, தஞ்சை திருவாரூர் மாவட்ட எல்லைகளிலும் கூண்டுகள் வைக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர்ந்து, இரவில் கண்காணிக்க கூடிய தெர்மல் ட்ரோன் மூலம் சோதனை இட்டனர். சிறுத்தையின் கால் தடம் எனக் கூறப்படும் சந்தேகத்துக்கு இடமான கால் தடத்தை ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, டி23 சிறுத்தையை பிடிப்பதில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன் காலன் உள்ளிட்ட குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இருப்பினும் மயிலாடுதுறை, திருவள்ளூர், தஞ்சாவூர் பகுதிகளில் கடைசி வரையில் சிறுத்தை பிடிபடவில்லை. இதனையடுத்து, அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள பொன்பரப்பி பகுதியில் 1000 ஏக்கர் பரப்பளவு உள்ள அரசு முந்திரிக்காட்டில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொன்பரப்பி கிராம மக்கள் சிலர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
அரியலூரிலும் சிறுத்தை
அரியலூரில் நெருக்கமான குடியிருப்புகள் மற்றும் ஆட்கள் நடமாட்டம் மிகுந்த செந்துறை அரசு மருத்துவமனைக்குல் சிறுத்தை புகுந்து உள்ளது. சிறுத்தை மருத்துவமனை சாலையின் குறுக்கே வந்து கம்பி வேலியை தாண்டி செல்லும் காட்சிகள் மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த செந்துறை போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் மருத்துவமனை வளாகத்தை சுற்றி வளைத்து தேடினர். இதனால் அச்சமடைந்த சிறுத்தை மீண்டும் மருத்துவமனை அருகே இருந்த குடியிருப்புக்கு சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து மருத்துவமனையில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளைப் பார்த்து இது சிறுத்தை தான் என்று உறுதி செய்தனர்.
அதனைத் தொடர்ந்து ஏற்கனவே மயிலாடுதுறையில் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த சிறப்பு வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் இங்கு வந்து தெர்மல் ட்ரோன் கேமராவை வைத்து சிறுத்தையை இருக்கும் இடத்தை கண்காணித்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில், மயிலாடுதுறை, அரியலூர் பகுதியில் சுற்றியது ஒரே சிறுத்தை தானா என்பதே இன்னும் தெரியாத சூழலில், தற்போது திருப்பத்தூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது.
மேலும் படிக்க | புதுப்பெண்ணை கடத்திய பெற்றோரை கைது செய்த போலீஸ்! நீலகிரி மாவட்ட காதல் திருமணம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ









