South Chennai DMK Candidate Thamizhachi Thangapandiyan News: தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நெருங்குவதை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறதுத எனலாம். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் சூழலில், கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது. இன்று முதல் வேட்புமனு பரிசீலனை மேற்கொள்ளப்படும் நிலையில், வேட்புமனுவை திரும்பப் பெற மார்ச் 30ஆம் தேதி வரை அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக என மும்முனை போட்டி காணப்படுகிறது. திமுக தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும், பாஜக தேசிய ஜனநாயக கூட்டணியிலும் இந்த தேர்தலை சந்திக்கும் நிலையில், எஸ்டிபிஐ மற்றும் தேமுதிக உடன் மட்டும் கூட்டணி அமைத்து அதிமுக தனித்து 33 தொகுதிகளை சந்திக்கிறது. தமிழ்நாட்டில் பல இடங்களில் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கி உள்ள நிலையில், ஒரே சில தொகுதிகளில் மூன்று தரப்பு வேட்பாளர்களும் நட்சத்திரங்களாக காணப்படுகின்றனர்.
தென்சென்னை தொகுதியில் கடும் போட்டி...
அதாவது, விருதுநகரில் காங்கிரஸ் வேட்பாளராக தற்போதைய எம்பி மாணிக்கம் தாகூர் மீண்டும் போட்டியிடும் நிலையில், அதிமுக கூட்டணியில் தேமுதிக வேட்பாளராக விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிடுகின்றனர். அதேபோல், மூன்று தரப்பிலும் நட்சத்திர வேட்பாளர்கள் களமிறங்கியிருக்கும் தொகுதிதான் தென்சென்னை.
மேலும் படிக்க | 'கொங்குச் சீமையின் கொள்கை வேங்கை' கணேசமூர்த்தி எம்.பி., மறைவு - வைகோ உருக்கம்
தென்சென்னை தொகுதியில் தற்போதைய எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியனே மீண்டும் திமுக தரப்பில் போட்டியிடும் நிலையில், பாஜக தரப்பில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்ட வந்த தமிழிசை சௌந்தரராஜன் களம்காண்கிறார். அதேபோல், அதிமுக தரப்பில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் மகன் ஜெயவர்தன் போட்டியிடுகிறார். எனவே, இந்த தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதை கணிப்பது கடினமாகி உள்ளது.
குற்றச்சாட்டும் மறுப்பும்...
அதுமட்டுமின்றி, தற்போதைய எம்.பி., தமிழச்சி தங்கப்பாண்டியன் மீது மக்களுக்கு கடும் அதிருப்தி இருப்பதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். சென்னை மிக்ஜாம் புயல் வெள்ளத்தின்போது போதிய உதவிகள் தமிழச்சி தங்கப்பாண்டியன் தரப்பில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.
இதனை அவர் மறுப்பது மட்டுமின்றி அதுகுறித்த விளக்கத்தையும் அளித்து வருகிறார். அந்த வகையில், தென்சென்னையின் இரயில்வே துறை சார்ந்த தேவைகளுக்காக அவர் குரல் கொடுக்கவில்லை என வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு அவர் இன்று விளக்கம் அளித்துள்ளார்.
'40 தொகுதிகளிலும் வெற்றி'
சென்னை தியாகராயர் நகரில், 142ஆவது வட்டத்திற்கு உட்பட்ட சிஐடி நகரில், போக் சாலை, சாதூல்லா ரோடு, வ.உ.சி தெரு, மேட்லி தெரு, காமராஜர் காலனி, பர்கிட் ரோடு, மன்னார் தெரு, தாமோதரன் தெரு உள்ளிட்ட பகுதிகளில், தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளரான முனைவர்.த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன், மாவட்டச் செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினர் மயிலை த.வேலு தலைமையில் இன்று (மார்ச் 28) வாக்கு சேகரித்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "கடந்த மூன்று நாட்களாக வாக்கு சேகரித்து வருகிறேன். செல்கின்ற இடமெல்லாம் பொதுமக்களும், கட்சியினரும், தோழமைக் கட்சியினரரும் அளிக்கும் வரவேற்பையும், அன்பையும், எழுச்சியையும் பார்கின்ற போது, திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி, நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெறுவது உறுதி" என்றார்.
தமிழச்சி தங்கப்பாண்டியன் விளக்கம்
நீங்கள் இரயில்வே துறையில் தொகுதிக்காக எந்த கோரிக்கையும் வைக்கவில்லை என்று எதிர்க்கட்சியினர் கூறுகிறார்களே என்று பத்திரிகையாளர் கேட்டனர். அதற்கு பதிலளித்த தமிழச்சி தங்கபாண்டியன், "தொகுதி முழுவதும் உள்ள இரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக நான் 2019இல் வெற்றி பெற்றது முதல் 2024 வரை அவ்வபோது ஆய்வு மேற்கொண்டு தென்னக இரயில்வே பொது மேலாளருக்கு குறைகளை மனுவாக அளித்துள்ளேன்.
ZRUCC கூட்டம் அனைத்திலும் கலந்துகொண்டு, தொகுதிக்குட்பட்ட அனைத்து இரயில்வே துறை சார்ந்த பிரச்சனைகளுக்காக பேசியுள்ளேன். அதன் விளைவாக மாம்பலம், சைதாப்பேட்டை இரயில் நிலையங்களில் பழுதடைந்த மேற்கூரை மாற்றப்பட்டது. தரமணி இரயில் நிலைய சாலையில் ரூ.1 கோடி 68 இலட்சம் மதிப்பீட்டில் 100க்கும் மேற்பட்ட மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மயிலாப்பூர் முண்டக்கன்னியம்மன் கோவில் இரயில் நிலையத்தில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான நுழைவு வாயில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. வேளச்சேரி - புனித தோமையர் மலை MRTS இணைப்பிற்காக, பாராளுமன்றத்தில் பலமுறை பேசியும், ரயில்வே அமைச்சரைச் சந்தித்து கோரிக்கை விடுத்ததன் காரணமாக, நிலம் கையகப்படுத்துதல் முடிக்கப்பட்டு, பணி மீண்டும் துவங்கப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில் குறித்தும் பல முறை நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்திருக்கிறேன்" என்றார்.
பரப்புரையில் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.கருணாநிதி, பகுதிச் செயலாளர் கே.ஏழுமலை, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ராஜா அன்பழகன், திமுக நிர்வாகிகள், தோழமைக் கட்சியினர் கலந்துகொண்டனர்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ