கவுரவம் பார்க்காமல் ஆசிரியர்களை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும்: மு.க.ஸ்டாலின்

தமிழக முதலமைச்சர் போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும் - ஆசிரியர்களையும் கவுரவம் பார்க்காமல் நேரடியாக அழைத்துப் பேசி அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jan 26, 2019, 02:03 PM IST
கவுரவம் பார்க்காமல் ஆசிரியர்களை அழைத்து முதலமைச்சர் பேச வேண்டும்: மு.க.ஸ்டாலின் title=

தமிழக முதலமைச்சர் போராடும் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பில் அடங்கியுள்ள ஊழியர்களையும் - ஆசிரியர்களையும் கவுரவம் பார்க்காமல் நேரடியாக அழைத்துப் பேசி அவர்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

1.4.2003-க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்தவர்களுக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்திட வேண்டும். 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனே வழங்க வேண்டும்” என்பது உள்பட 9 அம்சக்  கோரிக்கைகளை வலியுறுத்தி 51 ஆசிரியர் சங்கங்கள், 114 அரசு ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் சங்கங்களை உள்ளடக்கிய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர், பல்வேறு கட்டங்களாக  இன்றோ நேற்றோ அல்ல,கடந்த 22 மாதங்களுக்கும் மேல் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். பல்வேறு போராட்டங்களை அறிவித்து உரிய பலனில்லாத காரணத்தால் கடந்த 22 ஆம் தேதியிலிருந்து மீண்டும் அமைதியான முறையில் காலவரையறையற்ற அறவழிப் போராட்டத்தை அமைதியான முறையில் நடத்தி வரும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினைச் சேர்ந்த நிர்வாகிகளை மாவட்டந்தோறும் நள்ளிரவில் கைது செய்யும் அதிமுக அரசின் அராஜக-அடக்குமுறை நடவடிக்கைக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் அழைத்துப் பேசி அவர்களின் நியாயமான கோரிக்கைகளை தகுந்தபடிப் பரிசீலனை செய்வதற்குப் பதில், “தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது”, “பணி நீக்கம் செய்வோம் என்று மிரட்டுவது” போன்ற போராட்டத்தை மேலும் தூண்டிவிடும் கேடுதரும் வழிகளில், கொலைக்குற்றச்சாட்டிற்கு உள்ளான முதலமைச்சர் எடப்பாடி திரு பழனிச்சாமி, தன்னை ஏதோ ஜெயலலிதா போல நினைத்துக் கொண்டு , ஈடுபடுவதை ஒரு போதும் யாராலும் பொறுத்துக் கொள்ள முடியாது. ஓய்வூதியம் தொடர்பாக கமிட்டி போட்டு- அதன் அறிக்கை மீதும், ஏழாவது சம்பள கமிஷன் முரண்பாடுகளைக் களைய 19.2.2017 அன்றே நியமிக்கப்பட்ட சித்திக்குழு தொடர்பாகவும் எந்த மேல் நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கும், போராடுவோரை, அவர்களும் அரசு நிர்வாகத்தின் அங்கங்கள்தானே எனும் சிந்தனையோடு, முறைப்படி முதலமைச்சர் அழைத்துப் பேச மறுப்பதும்தான் இந்த போராட்டத்திற்குக் காரணமே தவிர- அரசு ஊழியர்களோ, ஆசிரியர்களோ அல்ல!

தலைமைச் செயலாளரையே நீதிமன்றத்தில் ஆஜராக வைத்து- அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் கோரிக்கைகளை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் பரிசீலனை செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கி அனுப்பியும், தலைமைச் செயலாளர் அமைச்சர்களுடனும், முதலமைச்சருடனும் விழாக்களில் பங்கேற்பதில் ஆர்வம் காட்டுகிறாரே தவிர, தான் வகித்துவரும் பதவிப்பொறுப்பினை உணர்ந்து நிறைவேற்றுவதில் முழுவதும் தோல்வியடைந்து காணப்படுகிறார். 

“ஆசிரியர்- அரசு ஊழியர்களின் நீண்டகாலக் கோரிக்கைகள் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும்” என்ற கடமையை  மறந்து  மிரட்டினால் எல்லாம் பணிந்து விடுவார்கள் என்று தலைமைச் செயலாளரும், முதலமைச்சரும் நினைப்பது நிர்வாக அவலட்சணங்களில் ஒன்றாகவே கருதப்படுகிறது. பந்து அடிக்க அடிக்க எழும் என்ற பாமரர்களுக்குத் தெரிந்திருக்கும் உண்மை,ஆட்சியாளர்களுக்குத் தெரியாமல் இருப்பது பேரவலம்தான்.அரசு ஊழியர்களுக்கு எல்லாம் நிர்வாக ரீதியாக தலைவராக இருக்கும் பொறுப்புள்ள தலைமைச் செயலாளர் ஒருவர், தன் பொறுப்பைத் துறந்து கீழிறங்கிவந்து, “எச்சரிக்கை விடுவதில்” மட்டும் கவனம் செலுத்துவது, அரசு நிர்வாகம் அதிமுக ஆட்சியில் எப்படி துருப்பிடித்து உதவாக்கரையாகி விட்டது என்பதற்கு ஊரறிந்த அடையாளமாக இருக்கிறது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா “எஸ்மா” “டெஸ்மா “சட்டங்களை கொடூரமாக கொடுங்கோல் குணத்தோடு பயன்படுத்தி அரசு ஊழியர்களை எதிரிகளென எண்ணிப் பழி வாங்கியது போல், இப்போது எடப்பாடி திரு பழனிச்சாமி அரசு,  நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்வதும், போராடும் ஆசிரியர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி வேனிற்குள் வீசும் காட்சிகளும் “காட்டு தர்பாரின் ஆட்சியன்றோ கோட்டையில் சாமரம்வீச கொலுவிருந்து கொண்டிருக்கிறது” என்பதை நினைவுபடுத்துகிறது. அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களின் கோரிக்கைகளை இழித்துப் பழித்த அதிமுக அரசு ஜெயலலிதா இருந்த போதே அழிந்து போனது என்பதை எடப்பாடி திரு பழனிச்சாமி நினைவில் வைத்து, இது போன்ற விபரீத விளையாட்டுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்க விரும்புகிறேன். 

அந்த விளையாட்டு எரியும் நெருப்பில் எண்ணெய் வார்ப்பதற்குச் சமம் என்ற பொது அறிவு வேண்டும். ஆகவே நள்ளிரவில் கைது செய்யப்பட்ட ஜாக்டோ-ஜியோ அமைப்பின் நிர்வாகிகள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களை உடனடியாக விடுதலை செய்து, காவல்துறையை ஏவி விட்டு கண்மூடித் தனமாக அராஜகத்தில் ஈடுபடுவதை அதிமுக அரசு உடனடியாக நிபந்தனையின்றி நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். 

அலட்சியமாக இருந்து, பதவி நாற்காலியில் அமர்ந்தபடியே தூங்கிவிட்டு, இப்போது தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கிறோம் என்று எதிர்மறை நடவடிக்கைகளில் ஈடுபட்டு, ஊழியர்களிடையே வெறுப்பு, எதிர்ப்பு, பகை ஆகியவற்றை வளர்க்க தூபம் போடாமல், அவை அனைத்தையும் முற்றிலும் தவிர்த்து, போராடும் அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும், கவுரவம் பார்க்காமல் உடனடியாக முதலமைச்சர் நேரடியாக அழைத்துப் பரிவுடன் பேசி, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கும், இந்தப்போராட்டத்திற்கு நிரந்தரத் தீர்வு காணவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Trending News