கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த கோமதி என்ற பெண் ஏப்ரல் 19 ஆம் தேதி அடித்துக் கொலை செய்யப்பட்டதாக தகவல் பரவியது. அவர் பாஜகவுக்கு வாக்களித்த காரணத்தால் திமுகவினர் அடித்தே கொன்றதாகவும் செய்திகள் வெளியானது. இது குறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை எழுதியிருந்தார். அதில், " கடலூர் மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் அருகே உள்ள பக்கிரிமானியம் கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோமதி என்பவர், வாக்குப் பதிவு நாளன்று, குடும்பத்தினர் கண்முன்னே திமுகவினரால் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
(@annamalai_k) April 21, 2024
தேர்தலில், தங்கள் கூட்டணிக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, திமுகவினர் இந்தப் பாதகச் செயலை செய்திருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இந்தக் குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட திமுகவினரை இன்னும் இந்த திமுக அரசு கைது செய்ததாகத் தெரியவில்லை. அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு வழங்கியிருக்கும் அடிப்படை உரிமையான வாக்களிக்கும் உரிமையைக் கூட, தங்கள் விருப்பப்படிதான் நடத்த வேண்டும் என்ற திமுகவின் சர்வாதிகாரப் போக்கு, ஜனநாயகத்துக்கு மிகுந்த ஆபத்தானது. இந்தியாவைக் காப்பாற்றப் போவதாகக் கனவு கண்டு கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், முதலில் தனது கட்சிக்காரர்களிடம் இருந்து தமிழக மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பார்க்க வேண்டும்.
உடனடியாக, இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர்களைக் கைது செய்து, கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்" என தெரிவித்திருந்தார். இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் கடலூர் மாவட்ட காவல்துறை வெளியிட்ட விளக்கத்தில், அப்பெண் அக்கம்பக்கதினரிடையே ஏற்பட்ட மோதலில் அடிபட்டு உயிரிழந்ததாக தெரிவித்தது. “கடந்த 19.04.2024 அன்று மாலை சுமார் 06.00 மணியளவில் ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் உள்ள ஆலமரம் முன்பு இரு தரப்பினருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில், இரு தரப்பினரும் ஆயுதம் ஏந்தாமல் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ள, கோமதி (ஜெயக்குமாரின் மனைவி) தலையிட்டு பிரச்னையை தடுக்க முயலும் போது, கீழே விழுந்து உள்காயம் ஏற்பட்டது.
கோமதியை முதலுதவி மற்றும் சிகிச்சைக்காக ஆண்டிமடம் PHC க்கு அழைத்துச் சென்றபோது, அவர் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, PS Cr.No. 96/2024 U/s 147, 148, 294 (b), 323, 324, 506(ii), 302 IPC r/w 4 of TN துன்புறுத்தல் தடைச் சட்டம் வழக்கு 20.04.2024 அன்று 01.00 மணிக்கு பதிவு செய்யப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட மொத்தம் 10 பேரில், ஐந்து பேர். 1. கலைமணி 2 தீபா (கலைமணியின் மனைவி) 3. ரவி 4. மேகநாதன் மற்றும் 5, அறிவுமணி ஆகியோர் கைது செய்யப்பட்டு 20.04.2024 அன்று நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர்” என்று தெரிவித்திருந்தது.
இந்த சூழலில், கடலூர் பெண் கொலை வழக்கில் பொய் செய்தி பரப்பியதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது கடலூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | கேரளாவில் தீவிர பிரச்சாரம் செய்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ