விரைவில் வீடு தேடி வருகிறது திருக்குறள், ஆவின் பாக்கெட் வழியாக!

விரைவில் திருக்குறளை இல்லம் தோறும் சேர்க்கும் விதமாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

Last Updated : Nov 13, 2019, 01:05 PM IST
விரைவில் வீடு தேடி வருகிறது திருக்குறள், ஆவின் பாக்கெட் வழியாக! title=

விரைவில் திருக்குறளை இல்லம் தோறும் சேர்க்கும் விதமாக, ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பாஜகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாநில தலைவர் CTR நிர்மல் குமார் என்பவர் திருக்குறளை ஆவின் பாக்கெட்டுகளில் அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு வீடுகளிலும் திருக்குவளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார். 

இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில்., "கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக திருவள்ளுவரின் உண்மை வரலாற்றை மறைத்து தமிழர்களுக்கு திமுக பெரும் துரோகம் இழைத்துள்ளதாகவும், திருக்குறளையும், தமிழ் மொழியையும் திமுகவினர் தங்கள் அரசியலுக்காக மட்டுமே பயன்படுத்தினர் தவிர மக்களிடையே கொண்டு சேர்க்க முயற்சிக்கவில்லை.

நமது பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியையும், திருக்குறளையும் உலக அரங்கில் அனைத்து தரப்பு மக்களிடமும் எடுத்துச் சென்று, தமிழுக்கு பெருமை சேர்த்து வருகின்றார்.

திருக்குறளை மக்களிடம் எளிமையாக கொண்டு சேர்க்க பல முயற்சிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம். அதன் தொடர்ச்சியாக ஆவின் பால் பைகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்குவதன் மூலம் ஒவ்வொரு இல்லங்களுக்கும் திருக்குறளை எளிமையாக கொண்டு சேர்க்க முடியும். இது ஒரு சிறு முயற்சி என்றாலும் இதை அமைச்சர் அவர்களின் மேலான பார்வைக்கு கொண்டு வருவதன் மூலம் இந்த கோரிக்கையை பரிசீலித்து செயல்வடிவம் கொடுக்குமாறு கேட்டு கொள்கிறோம்" என குறிப்பிட்டுள்ளார்.

அவரது கோரிக்கையை ஏற்று தமிழக அரசு ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறளை அச்சிட்டு வழங்க நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இதுகுறித்து தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தெரிவிக்கையில், மிக விரைவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுடன் பேசி ஒப்புதல் பெற்று ஆவின் பால் பாக்கெட்டுகளில் திருக்குறள் அச்சிடப்பட்டு வெளியாகும் என குறிப்பிட்டிருந்தார்.

மேலும் தமிழக பாஜக கட்சி அமைச்சரின் இந்த ட்விட்டர் பதிவு குறித்து வரவேற்று இருப்பதாக அதனுடைய ட்விட்டர் பக்கத்தில் தகவலை பகிர்ந்துக்கொண்டார்.

திருவள்ளுவரை மையமாக வைத்து கடந்த சில நாட்களாக கருத்து மோதல் நடைபெற்று வரும் நிலையில் அமைச்சரின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும், அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் இந்த அறிவிப்பிற்கு பாஜக தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

Trending News