தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கு அதிமுக அரசு நிரந்தர தீர்வு காணாததால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக திமுக எம்.பி. கனிமொழி குற்றஞ்சாட்டியுள்ளார்!
கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்ட நிலையில், சென்னையில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. சென்னை நகரவாசிகள் தண்ணீர் பஞ்சத்தை சமாளிக்க முடியாமல் தவித்து வருகின்றனர். சென்னை நகரம் கிட்டத்தட்ட 200 நாட்கள் வானம் பார்த்த பூமியாக இருப்பதாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் நீர் நிலைகள் வறண்டுவிட்டன. குறிப்பாக சென்னையில் முக்கிய குடிநீர் ஆதாரங்களான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வறண்டு போய்விட்டன.
சென்னை முழுவதும் கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டு நிலவி வரும் நிலையில், பல இடங்களில் ஹோட்டல்கள் மற்றும் ஐடி நிறுவனங்கள் முடக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளன. இந்நிலையில் தமிழகத்தில் நிலவி வரும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அரசு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் வளியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி, தமிழகம் முழுவதும் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை போக்க அதிமுக அரசு நிரந்தர தீர்வு எதுவும் மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் திமுக ஆட்சி காலத்தில் கடல் நீரை குடிநீராக்கு திட்டம் கொண்டுவரப்பட்டது என்ற காரணத்தால் அதனை தற்போதைய அதிமுக அரசு கிடப்பில் போட்டுள்ளது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
நீர் நிலைகளை துர்வாராமல், பராமரிக்காமல் போனதே தண்ணீர் தட்டுப்பாட்டுக்கான முழு காரணம் என கனிமொழி குறிப்பிட்டு பேசியுள்ளார்.