ஓய்வூதிய திட்டம் குறித்த கோரிக்கைகள் பல வைத்து சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்!
புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டுப் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் எனவும் உயர்த்தப்பட்ட ஊதியத்துக்கான 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் எனவும் கோரி சென்னையில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
சென்னை சேப்பாக்கம் எழிலகம் வளாகத்தில் நடைப்பெறும் இப்போராட்டத்தில் இருநூற்றுக்கு மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். மாலையில் அனைத்து மாவட்டங்களிலும் ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மாயவன் தெரிவித்தார்.
முன்னதாக நேற்று பணிநிரவல் என்று காரணம் காட்டி ஆசிரியர் பணியிடங்களில் ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது ஜாக்டோ சார்பில் சென்னையில் போராட்டம் நடத்தப்பட்டது.
தமிழக அரசு பள்ளிகளில் மாவட்ட வாரியாக உள்ள பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில், ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளில் இருந்து, ஆசிரியர்கள் கட்டாய இடமாறுதல் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இந்த செயல்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்கத்தினர் சென்னை சேப்பாக்கத்தில் போராட்டம் நடத்தினர்.
இதனையடுத்து இன்று ஓய்வூதிய திட்டம் குறித்த கோரிக்கைகள் பல வைத்து சென்னையில் ஆசிரியர், அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பினர் உண்ணாவிரதத்தில் ஈடுப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.