கல்வித்துறை, ஒரு போதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது என முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு கோரிக்கை!!
"உயர்கல்வி படிக்க முன் அனுமதிக்காக விண்ணப்பித்த சுமார் 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை; கல்வித்துறை கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது" என திமுக முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு காட்டம்.
- முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு MLA அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்.... "முன் அனுமதியின்றி உயர்கல்வி படித்துவிட்டதாகக் கூறி, ஏறத்தாழ 5000 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு, தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டிருப்பதாகச் செய்திகள் வந்துள்ளன.
ஆசிரியர்கள் கூடுதலாகக் கல்வி கற்றுவிட்டார்கள் என்று காரணம் சொல்லி, அவர்கள் மீது கல்வித்துறையே நடவடிக்கை மேற்கொள்வதென்பது ஒரு வகையில் நகை முரணாகத் தோன்றினாலும், அவர்கள் அதற்கான முன் அனுமதியினைத் துறையிடம் இருந்து பெறவில்லை என விதிகளைச் சுட்டிக்காட்டி, இந்த நெருக்கடியான சூழ்நிலையில் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க முனைவது வேதனையானது, கண்டிக்கத்தக்கதாகும்.
உண்மை என்னவென்றால், அனுமதிக்காக ஆசிரியர்கள் விண்ணப்பித்து, அதன் மீது எந்த நடவடிக்கையும் இன்றி, இந்த அரசின் செயலற்ற நிர்வாகத்தால் பல ஆண்டுகளாக அந்தக் கோரிக்கைகள் அதிகார மட்டத்தில் தேங்கிக் கிடக்கின்றன. நீண்ட காலதாமதத்தின் காரணமாக, அரசின் அனுமதியை எதிர்நோக்கி, இடைப்பட்ட காலத்தில் உயர்கல்வியினை மேற்கொண்ட ஆசிரியர்களுக்குப் பின்னேற்பு அனுமதி வழங்க அரசு கருதியிருப்பதாகக் கடந்த ஜனவரி மாதம் செய்திகள் வந்த நிலையில், தற்போது "நடவடிக்கை பாயும்" என்று வந்துள்ள செய்தி அதிர்ச்சி அளிக்கின்றது.
ALSO READ | ரயிலின் கடைசி பெட்டியின் பின்பக்கத்தில் இருக்கும் 'X' குறியீட்டின் ரகசியம் தெரியுமா?
ஏற்கனவே இந்த அரசால், ஆசிரியர் சமுதாயம் பல வழிகளில் பழிவாங்கப்பட்டு, பலர் மீது குற்றவழக்குகள் புனையப்பட்டு, மிகுந்த துயரத்துக்கு ஆளாக்கப்பட்டு இருக்கின்றது. அவர்கள் மீதான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் எனக் கழகமும், ஆசிரியர் சங்கங்களும் தொடர்ந்து சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் குரல் எழுப்பி வருகின்றன. ஆயினும் இன்றுவரை தமிழக அரசு பாராமுகமாகப் பிடிவாதப் போக்குடனேயே நடந்து கொள்கிறது.
இப்போது “கொரொனா” நோய்த்தொற்றால் கடந்த நான்கு மாதங்களாக நாடே அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிலையில், அனுமதி பெறவில்லை என்ற காரணத்தைக் காட்டி ஐயாயிரம் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பது என்பது, கொஞ்சமும் மனிதாபிமானமற்ற செயல் மட்டுமல்ல; ஈர நெஞ்சம் படைத்த எவராலும் எப்போதும் ஏற்க முடியாத செயலும் ஆகும்.
எனவே, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல, ஏற்கனவே அவதிக்கு ஆளாகி இருக்கும் ஆசிரியர்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கிடும், தொடக்கக் கல்வித்துறையின் இந்த ஆணையை உடனே திரும்பப் பெறவேண்டும் என கழகத்தின் சார்பில் வலியுறுத்துகின்றேன்.
கல்வித்துறை, ஒரு போதும் கருணையற்ற துறையாக மாறிவிடக்கூடாது" என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.