நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 2வது ஆலை பணி 2021ல் முடிக்கப்பட்டு நீர் விநியோகிக்கப்படும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்!!
மதிப்பீட்டில் 2வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இன்று கடல் நீரை குடிநீராக்கும் திட்டப்பணியினை முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, ஜெயக்குமார், செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த 2வது கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாள் ஒன்று 150 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட நீர் பெற திட்டமிடப்பட்டுள்ளது.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறுகையில்; நெம்மேலி கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. சென்னை மாநகர மக்களுக்கு தங்குதடையின்றி குடிநீர் வழங்க உதவும் திட்டம் இது. எந்தெந்த பகுதியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்தலாம் என ஆய்வு நடைபெற்று வருகிறது. வறட்சி பாதித்த பிற கடலோர மாவட்டங்களில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி திட்டம் 2021-ல் நிறைவு பெற்று குடிநீர் விநியோகிக்கப்படும். ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டம் 2 வாரத்திற்குள் செயல்படுத்தப்படும். சென்னைக்கு என்றைக்கும் குடிநீர் பிரச்சனை ஏற்படாதவாறு திட்டம் தீட்டி அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தை பாதிக்கும் எந்த திட்டத்தையும் தமிழக அரசு ஏற்றுக்கொள்ளாது, தமிழகத்துக்கு சாதகமான திட்டங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மழை பெய்யாததே பிரச்னைக்கு காரணம்; மழை பெய்தால்தான் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
இனி புதிய தொழிற்சாலைகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும்போது நீரை மறுசுழற்சி செய்வதற்கு வசதி செய்தால்தான் அனுமதி வழங்கப்படும். கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. காவிரி நீரைப் பெற மேலாண்மை ஆணையத்தின் மூலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
ஏற்கனவே திருவள்ளூர் மாவட்டம் காட்டுபள்ளியில் 10 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் நாள் ஒன்று 100 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பது குறிப்பிடத்தக்கது.