ஏழை மக்களுக்கான அரசை கவிழ்த்துவிட வேண்டும் என்று நினைப்பது நிறைவேறாத ஆசையாக தான் இருக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்!
ஆசிரியர்களையோ அரசு ஊழியர்களையோ அச்சுறுத்த தாங்கள் பயங்கரவாதிகள் அல்ல என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடிப்பதால், வேறு வழி இல்லாமல் நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில், சமூகநலத்துறை மூலம் ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சரோஜா கலந்துகொண்டு ஆயிரத்து 36 பயனாளிகளுக்கு தங்கம் மற்றும் உதவித்தொகை அளித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ஆட்சி கவிழும் என்பது கனவல்ல நினைவாகும் என மு.க.ஸ்டாலின் சொன்னது கனவாகவே மட்டுமே இருக்கும் என்றார்.
ஜாக்டோ ஜியோ அமைப்பினரிடம் ஏற்கனவே பல முறை பேச்சுவார்த்தை நடத்தி அரசின் சிரமங்களை எடுத்து சொல்லப்பட்டுள்ளதாகக் கூறிய ஜெயக்குமார், வருவாயில் 29 சதவீதம் மட்டுமே நல திட்டங்களுக்கு செலவிடப்படுவதாகக் கூறினார். மீதமுள்ள 71 சதவீதம் சம்பளம், ஓய்வூதியம், நிர்வாகச் செலவு, கடனுக்கான வட்டிக்கு செலவிடப்படுகிறது எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
போராட்டம் நடத்தி வரும் ஆசிரியர்கள் பிடிவாத போக்கை கடைபிடித்து வருகிறார்கள் என்றும், வேறு வழி இல்லாமல் தான் நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது எனவும் அவர் விளக்கம் அளித்தார். மனம் இருந்தும் பணம் இல்லாததால்தான் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியவில்லை என்பதை போராடும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் புரிந்துகொண்டு பணிக்குத் திரும்ப வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டார்.