உங்களுக்கும் நல்லது; உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது: முதலமைச்சர் எச்சரிக்கும் டி.ஆர்.பாலு

தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிரூபிக்கப்படாத, திட்டமிட்டு பொய்யாக, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அடிப்படை தகவலை தெரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேச வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 30, 2019, 07:08 PM IST
உங்களுக்கும் நல்லது; உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது: முதலமைச்சர் எச்சரிக்கும் டி.ஆர்.பாலு title=

சென்னை: தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நிரூபிக்கப்படாத, திட்டமிட்டு பொய்யாக, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். அடிப்படை தகவலை தெரிந்து கொண்டு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் பேச வேண்டும் என திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு எச்சரித்துள்ளார். 

அதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு “எதைப் பேசுவது என்று தெரியாமல் கூட்டிக் கொண்டுவந்து சேர்த்த கூட்டத்தில் எதையாவது பேசிக் கொண்டிருப்பதை” பார்க்கும் போது, அவர் வேறு யாருக்கோ எதற்கோ பயந்து, ஏதோ ஒரு நடுக்கத்தில் முதலமைச்சர் பதவியை விடமுடியாமல் நீடித்துக் கொண்டிருப்பது போல் தெரிகிறது. நிரூபிக்கப்படாத, திட்டமிட்டு பொய்யாக, போகிற போக்கில் புழுதி வாரித் தூற்றுவதற்காக, சூதான எண்ணத்துடன் கொடுக்கப்பட்ட ஒரு வீண் புகாரை மேற்கோள்காட்டி “வீராணம் ஊழல்” என்று கூறியிருக்கிறார். 

எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள் கோடிட்டுக் காட்டிய வீராணம் திட்டத்தைத்தான், முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா கொண்டு வந்து நிறைவேற்றினார் என்ற அடிப்படை தகவலைக் கூடத் தெரிந்து கொண்டு பேசுவதற்கு முதலமைச்சர் தயாராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது.

“திமுக ஆட்சியில் வீரணம் ஊழல்” என்று கூறும் முதலமைச்சர் அதிமுக ஆட்சியில் முதலமைச்சரே ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டதையும், தற்போது முதலமைச்சராக இருக்கும் இவர் மீதே அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையில் நிலுவையில் இருப்பதையும் ஏனோ மறந்து விட்டார். “ஊழல் வழக்கின் மீது சி.பி.ஐ. விசாரணை” என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டவுடன் தலை தெறிக்க ஓடோடிச் சென்று உச்சநீதிமன்றத்தில் “ஸ்டே” வாங்கியது யார்? சாட்சாத் முதலமைச்சர் அவர்கள்தானே! தன் முதுகில் எந்த அழுக்கும் இல்லை; பரிசுத்தமானவர் என்றால் உச்சநீதிமன்றத்தில் தான் வாங்கிய ஸ்டேயை விலக்கிக் கொண்டு ஊழல் வழக்கு விசாரணையை எதிர்கொள்ள முதலமைச்சர் தயாரா? ஏதோ உச்சநீதி மன்றம் தானே முன்வந்து தடை ஆணை பிறப்பித்ததைப் போல பிதற்றுவது ஏன்? இப்போது கூட நான் பகிரங்கமாக ஒரு கேள்வியை கேட்கிறேன். முதலமைச்சர் பொறுப்பில் உள்ள காவல்துறையில் நடைபெற்றுள்ள 350 கோடி ரூபாய் டெண்டர் ஊழலை சி.பி.ஐ. விசாரணைக்கு ஒப்படைக்கத் தயாரா?

குடிமரமாத்து திட்டத்தை தி.மு.க. ஆட்சி கொண்டு வந்தது என்பதை நாங்கள் நிரூபிக்கிறோம். அது “அதிமுகவின் திட்டம்தான்” என்பதை நிரூபிக்கத் தயாரா? காவிரிக் கால்வாய் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் தூர் வாரிய பணிகளை ஏற்கனவே எங்கள் ஆட்சியில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்து அண்ணன் துரைமுருகன் அவர்கள் பட்டியலிட்டிருக்கிறார். அதற்கு நேரடியாகப் பதில் சொல்ல வக்கற்ற முதலமைச்சர், “எந்தப் பகுதியிலாவது தூர் வாரியதை தி.மு.க. ஆட்சியில் பார்த்து இருக்கிறீர்களா” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். பொதுப்பணித்துறை அமைச்சராகவும் இருக்கும் முதலமைச்சர், கடந்த கால கொள்கை விளக்கக் குறிப்புகளை படிப்பதே இல்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.

“அதிமுக ஆட்சியில்தான் தூர்வாரும் பணிகளைச் செய்து வருகிறோம்” என்று பொதுவாகக் குறிப்பிடுகிறார் முதலமைச்சர். அதிமுக ஆட்சியில் தூர்வாரும் பணி முறையாக நிறைவேற்றப்பட்டிருந்தால், காவிரி டெல்டாவில் கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் போகாதது ஏன்? காவிரி உபரி நீர் நேரே கடலில் போய் கலப்பது ஏன்? இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் சொல்ல முடியுமா? அதிமுக ஆட்சியில் குடிமராமத்துப் பணிகள் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் குடி உயரவும், கொள்ளை பரவவும் உருவாக்கப்பட்டது - ஏரி குளங்களைத் தூர் வார அல்ல! உங்கள் ஆட்சியில் நடக்கும் தூர் வாரும் பணியில் 18 சதவீதம் கமிஷன் அடிக்கிறீர்கள் என்று பொது மக்கள் உங்கள் மீது குற்றம் சாட்டுகிறார்கள். முதலமைச்சரால் இல்லை என்று மறுக்க முடியுமா? 

தமிழக மாணவர்களை அரசுப் பணியில் சேர விடாமல் தடுக்கும் வகையில் ஒரு புதிய பாடத்திட்டத்தை அறிவித்து விட்டு- தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தன்னாட்சி அமைப்பு என்கிறார் முதலமைச்சர். தமிழ்நாடு பப்ளிக் சர்வீஸ் கமிஷனில் அதிமுகவினரை உறுப்பினர்களாக நியமித்து - அதை அதிமுகவின் அலுவலகமாக மாற்றி அமைத்து - உச்சநீதிமன்றம் வரை போய் மூக்குடைபட்டதையும், அதை நாட்டு மக்கள் பார்த்து நகைத்ததையும் ஏனோ முதலமைச்சர் வசதியாக மறந்து விட்டார்.

ஆகவே முதலமைச்சர் பழனிச்சாமி ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். திமுக ஆட்சியில் அணைகள் கட்டியதும், காவிரிக் கால்வாய்களைத் தூர் வாரியதும், எதிர்க்கட்சி என்ற நிலையிலும் தி.மு.க. ஏரி குளங்களைத் தூர் வாரியதும், எங்கள் கழகத் தலைவரே முன்னின்று பல மாவட்டங்களில் தூர் வாரச் செய்திருக்கிறார் என்பதும் தமிழக மக்களுக்கும் பத்திரிகை மற்றும் ஊடகத்துறை நண்பர்களுக்கும் நன்கு தெரியும். 

சேலத்தில் ஏரியை தூர் வாரப் போன எங்கள் தலைவரை தடுத்தவர் நீங்கள். ஆகவே எங்கள் தலைவரைப் பற்றிப் பேசுவதற்கு, எந்தத் தகுதியும் உங்களுக்கு இல்லை என்பதை முதலில் நீங்கள் நினைவில் கொள்ளுங்கள். அது உங்களுக்கும் நல்லது; உங்கள் எதிர்காலத்திற்கும் நல்லது என்று தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

இவ்வாறு திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

Trending News