தமிழகம் நாளை பொது தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களுக்கும் தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், அதன் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
தமிழகத்தில் நாளை +2 தேர்வுகள் துவங்க உள்ளன. முதன்முறையாக +1 மாணவ - மாணவியர்களுக்கும் பொதுத்தேர்வுகள் நடைபெறவுள்ளன. அதேபோல 10ம் வகுப்பு மாணவ - மாணவியர்களுக்கும் தேர்வுகள் துவங்கவுள்ளன. மொத்தத்தில் +2, +1, 10ம் வகுப்புகளில் பயிலும் 27 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் தேர்வு எழுதவுள்ளனர்.
இந்த தேர்வுகள் எழுதக் கூடிய மாணவ - மாணவியர்கள் அனைவரும் நல்லமுறையில் தேர்வுகள் எழுதி, அவர்கள் சிறந்த மதிப்பெண்களை பெறுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழக அரசின் கல்வித்துறையும், ஆசிரியர்களும் மாணவ - மாணவியர்கள் இயல்பான முறையில் தேர்வு எழுதுகிற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். முறைகேடுகளை தடுப்பது அவசியம் தான்; இருந்தாலும் முறைகேடுகள் தடுப்பு என்கிற பெயரில் ஏற்கனவே தேர்வு அச்சத்தில் இருக்கிற மாணவ - மாணவியர்களை மேலும் பதற்றப்படுத்துகிற நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது.
மாணவ - மாணவியர்களும் எந்த பதற்றமும், அச்சமும் இல்லாமல் இயல்பான முறையில் தேர்வுகளை எழுத வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். பெற்றோர்களும் மாணவ - மாணவியர்களுக்கு அழுத்தம் கொடுக்காமல் அவர்களுக்கு உதவிட வேண்டும்.
நீட் தேர்வு என்பதை காரணம் காட்டி இந்த தேர்வுகளில் மாணவ - மாணவியர்களை வடிகட்டும் முறையினை அரசு கடைபிடிக்கக் கூடாது. இத்தகைய வடிகட்டும் முறையில் செயல்படுத்தப்பட்டால், அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ - மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள்.
அதேபோல, தேர்வு காலங்களில் சுமார் 25 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர்கள் காலையில் சிற்றுண்டி கூட அருந்தாமல் தேர்வுகளுக்கு வருவது என்பது நடைமுறையில் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனவே, தேர்வு மையங்களில் மாணவ - மாணவியர்களுக்கு தேநீர் அல்லது குளிர்பானங்கள் வழங்கி மாணவ - மாணவியர்களை ஊக்கப்படுத்துகிற நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.