தமிழ் மொழி தோற்றம் குறித்து பள்ளி பாடப்புத்தகத்தில் பதிவிடப்பட்ட தவறான பகுதி நீக்கம் செய்யப்படும் என்றும், உடனடியாக திருத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்!
தமிழக பள்ளிக்கல்வித்துறை இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பிற்கு புதிய பாடத்திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. அதில், ஆங்கில புத்தகத்தில் தொன்மையான மொழியான தமிழின் நிலை என்ற தலைப்பில் பாடம் இடம் பெற்றுள்ளது.
இந்த பாடப்பகுதியில் உலகின் பழங்கால மொழிகளில் ஒன்றான தமிழ் மொழி கி.மு 300 ஆண்டுகள் முன்பு உருவானதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதேபோல், மற்ற தொன்மை மொழிகளான சீன மொழி கி.மு 1250 ஆண்டிலும், கிரேக்கம் கி.மு 1500 ஆண்டிலும், சம்ஸ்கிருத மொழி கி.மு 2000 ஆண்டு முன்பு உருவானதாகவும் தகவல் உள்ளது.
இந்த புதிய பாடத்திட்டத்தில் தமிழ் மொழி தொன்மை குறித்த தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது தமிழ் மொழி 2300 ஆண்டுகள் பழமையானது என்று தெரிவித்தது தான் சர்சைக்கு முக்கிய காரணம்.
இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றனர். தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்று பறைசாற்றி வரும் நிலையில், இந்த பதிவு பல்வேறு விதமான எதிர்ப்புகளை உருவாக்கிவிட்டது.
இந்த நிலையில் இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். அவர் அளித்த விளக்கத்தில், பன்னிரண்டாம் வகுப்பு பாடபுத்தகத்தில் உள்ள தவறான பாடப்பகுதி உடனடியாக மாற்றப்படும். தவறாக குறிப்பிட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.