சர்க்கரை விலை உயர்வு - வைகோ கண்டனம்

Last Updated : Oct 28, 2017, 10:34 AM IST
சர்க்கரை விலை உயர்வு - வைகோ கண்டனம் title=

தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது கண்டனத்துக்குறியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

தமிழக அரசின் நியாயவிலைக் கடைகளில் விற்பனை செய்யப்படும் சர்க்கரை விலை 13 ரூபாய் 50 காசுகள் என்பதை 25 ரூபாயாக உயர்த்தி இருப்பது ஏற்க முடியாதது, கண்டிக்கத்தக்கது ஆகும். வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு மட்டுமே பழைய விலையில் கிடைக்கும் என்ற அறிவிப்பும் கண்துடைப்பு ஆகும். 

தமிழகத்தில் மொத்தம் உள்ள 1 கோடியே 98 இலட்சம் குடும்ப அட்டைதாரர்களில், வெறும் 18.64 இலட்சம் பேர்தான் வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளார்கள் என்று தமிழக அரசு வரையறுத்துள்ளது.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை தமிழகம் நடைமுறைப்படுத்த ஒப்புதல் அளித்த பின்னர், மத்திய அரசின் அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் காணவேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டதால், 18.64 இலட்சம் பேர்தான் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளார்கள் என்றும், அவர்களுக்கு மட்டுமே மானிய விலையில் அரிசி மற்றும் சர்க்கரை விநியோகிக்கப்படும் என்றும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உத்தரவை ஏற்று தமிழக அரசு இந்நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.

2017 பிப்ரவரி மாதம் மத்திய நிதித்துறை அமைச்சர் அருண்ஜெட்லி நிதிநிலை அறிக்ககை தாக்கல் செய்தபோது, சர்க்கரை மானியம் ரத்து என்று அறிவித்தார். பொது விநியோகத்திட்டத்திற்கான மானியத்தை படிப்படியாக இரத்து செய்து, அத்திட்டத்தையே முழுமையாக முடக்குவதற்கான முயற்சியில் மோடி அரசு தீவிரமாக இருக்கிறது. ஏனெனில் உலக வர்த்தக ஒப்பந்தப்படி உணவு தானிய சந்தையை தனியார் நிறுவனங்கள் கைப்பற்றுவதற்கு தடையாக உள்ள பொது விநியோக முறையை கைவிட வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நோக்கமாகும். 

அதற்கு முன்னோட்டமாக கடந்த ஜூலை 1-ம் தேதி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையில், “முன்னுரிமை குடும்ப அட்டைகள் அடையாளம் காணப்பட்டு, பங்கீட்டுக் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும். ஆண்டு வருவாய் ஒரு இலட்சம் ரூபாய் உள்ளவர்களுக்கு இனி பங்கீட்டுக் கடைகளில் வழங்கப்பட்டு வரும் அரிசி, கோதுமை, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் நிறுத்தப்படும்” என்று கூறி இருக்கிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தபோதும் தமிழக அரசு திரும்பப் பெறவில்லை.

உணவு மானியத்திற்கான கூடுதல் செலவை தமிழக அரசு ஏற்கும் என்று வெற்று அறிவிப்பு செய்யப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது சர்க்கரை விலையும் இரு மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.

உணவு மானியத்தை இரத்து செய்ய வேண்டும் என்ற உலக வங்கியின் உத்தரவை செயல்படுத்த மத்திய அரசு, மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை, சர்க்கரை ஒதுக்கீட்டில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. விலைவாசி ஏற்றம், ஜி.எஸ்.டி. வரி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை மாறுதல் போன்றவற்றால் மாத ஊதியம் பெறுவோர், நடுத்தர குடும்பத்தினர் கடும் சுமைகளை தாங்க முடியாமல் தவிக்கின்றனர். சாதாரண அடித்தட்டு மக்கள் வாழவே முடியாத நிலை உருவாகி வருகிறது. 

இந்நிலையில் மத்திய, மாநில அரசுகள் பொதுவிநியோகத் திட்டத்திற்கு ஒரேயடியாக மூடுவிழா நடத்த முயற்சிப்பது கடும் கண்டனத்துக்கு உரியதாகும். மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு அடிபணிந்து வரும் தமிழக அரசு, உடனடியாக சர்க்கரை விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Trending News