பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் விற்பனை ரூ.605 கோடி; எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்

ஒவ்வொரு ஆண்டும் மதுவிற்பனை அதிகரித்துக் கொண்டே போவது தமிழகத்திற்கு நல்லது அல்ல. வளரும் சமூகத்தினருக்கு பெரும் கேடு என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

ZEE Bureau ZH Web (தமிழ்) | Updated: Jan 19, 2020, 03:16 PM IST
பொங்கல் விடுமுறையில் டாஸ்மாக் விற்பனை ரூ.605 கோடி; எச்சரிக்கும் சமூக ஆர்வலர்கள்
File photo

சென்னை: தமிழ்நாடு முழுவதும் மதுபானங்களை விற்பனை செய்து வரும் "டாஸ்மாக்", இந்த பொங்கலுக்கும் பணத்தை அள்ளி குவித்துள்ளது. கடந்த அண்டை விட அதிக அளவில் விற்பனை ஆகியுள்ளது. அதாவது ரஜினி, விஜய் படங்களை விட "டாஸ்மாக்" வியாபாரம் அமோகமாக இருக்கிறது. 

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக் விற்பனைக்கு இலக்கு நிர்ணயிக்கப்படுவது வழக்கம். இந்தமுறையும் சுமார் ரூ.500 கோடி வரை இலக்கு வைத்து விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இலக்கை விட அதிக அளவில் மது விற்பனை ஆகியுள்ளது. அதாவது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகமாகியுள்ளது. 

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி டாஸ்மாக் மது விற்பனை சுமார் 606 கோடி ரூபாய் விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

பொங்கல் பண்டிகையை அடுத்து ஜனவரி 14, 15 மற்றும் 17 ஆகிய மூன்று நாட்களில் மட்டும் இந்த விற்பனை ஆகியுள்ளது. ஜனவரி 16 திருவள்ளுவர் தினத்தன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதாவது தமிழகம் முழுவதும் சென்னை, கோவை, மதுரை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய ஐந்து மண்டலங்களாக பிரிக்கப்பட்டு மதுவிற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிகபட்சமாக திருச்சி மண்டலத்தில் 143 கோடி ரூபாய் வசூல் ஆகியுள்ளது.

கடந்த 14 ஆம் தேதி போகியன்று ரூ. 178 கோடிக்கும், 15 ஆம் தேதி பொங்கல் அன்று ரூ. 253 கோடியும், காணும் பொங்கல் 17 ஆம் தேதியன்று ரூ. 174 கோடியும் மது விற்பனை ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஒவ்வொரு ஆண்டும் மதுவிற்பனை அதிகரித்துக் கொண்டே போவது தமிழகத்திற்கு நல்லது அல்ல. வளரும் சமூகத்தினருக்கு பெரும் கேடு என சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வருகின்றனர்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.