டி.டி.வி தினகரன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதனையடுத்து வரும் தேர்தல்களில் தனக்கு நிரந்தரமாக குக்கர் சின்னத்தை ஒதுக்க வேண்டும் எனவும், தான் பரிந்துரைத்த மூன்று பெயர்களில் ஏதேனும் ஒரு பெயரை கட்சிக்கு ஒதுக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், தினகரன் பரிந்துரைத்த ஏதேனும் ஒரு பெயரை தேர்தல் ஆணையம் அவருக்கு வழங்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று (மார்ச்-15) நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியினை அறிவிப்பதாக தினகரன் கூறியிருந்தார். இதற்காக மதுரையில் பொதுக்கூட்டத்திற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. காலை 10 மணி அளவில் பொதுக்கூட்டத்தில் கட்சியின் பெயர் மற்றும் கொடியினை தினகரன் அறிமுகம் செய்துவைத்தார்.
தேர்தல் ஆணையத்தின் பரிந்துரைப்படி, கட்சிக்கு "அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்" என பெயரிடப்பட்டுள்ளது. கட்சியின் கொடி கருப்பு, வெள்ளை, சிவப்பு வண்ணங்களுடன் மத்தியில் ஜெயலலிதாவின் உருவப்படம் அமைந்துள்ளது.
முன்னதாக பொதுக்கூட்ட மேடையில் வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்களுக்கு தினகரன் மரியாதை செலுத்தினார். இந்த கூட்டத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்-கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இன்று தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் அதே நேரத்தில் டி.டி.வி தினகரன் கட்சியின் பெயரை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.