"தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஸ்டாலின்!" பாராட்டிய மிஷ்கின்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இயக்குநர் மிஷ்கின், பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார்.

Written by - நவீன் டேரியஸ் | Last Updated : Mar 14, 2022, 02:38 PM IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த மிஷ்கின்
  • ‘எங்க ஆட்சி எப்படி இருக்கு மிஷ்கின் ?’ என கேட்ட முதலமைச்சர்
  • ‘மக்களின் அதிக நம்பிக்கை பயம் தருகிறது’ - மு.க.ஸ்டாலின்
"தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஸ்டாலின்!" பாராட்டிய மிஷ்கின் title=

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து இயக்குநர் மிஷ்கின், பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல், தஸ்தாயெவ்ஸ்கியின் ‘தி இடியட்’ நாவலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்த நாள் பரிசாகவும் மிஷ்கின் தந்துள்ளார். இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள இயக்குநர் மிஷ்கின், தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த கதையையும், அந்த உணர்வுகளையும் பதிவிட்டுள்ளார். 

இனி மிஷ்கின்!, 

‘'பிறந்தநாளன்று முதல்வருக்குப் பூங்கொத்து குடுக்க முடியுமா?' என்று சகோதரி கிருத்திகா உதயநிதியிடம் கேட்டேன். பத்து நிமிடங்களுக்குள் மூன்று பேர்கள் என்னை அழைத்தார்கள். 'ஐயா இன்று முழுவதும் அலுவல்களில் இருக்கிறார், நாளை மதியம் சந்திக்கிறீங்களா?' எனக் கேட்டார்கள். 'அவரை தொந்தரவு செய்ய வேண்டாம். ஒரு வாரத்திற்குப் பிறகு எனக்கு இரண்டு நிமிடங்களை ஒதுக்கி தாருங்கள்' எனக் கேட்டுகொண்டேன்.

இன்று எனக்கு அழைப்பு வந்தது. 'மாலை ஆறரை மணிக்கு வாருங்கள். மலர்கள் கொடுக்க வேண்டாம், புத்தகங்களைக் கொடுங்கள்' என்ற அன்பான உத்தரவுடன் அழைத்தார்கள். 20 தமிழ் புத்தகங்களை வாங்கி முதல்வர் வீட்டிற்குச் சென்றேன். ஒவ்வொரு படிக்கட்டிலும் அவரை நேசிக்கின்ற மனிதர்கள். ஒருவர் ஒரு கதவைத் திறந்து 'உள்ளே உட்காருங்க' என வேண்டிக் கொண்டார். அது முதல்வரின் அறை. அமைதி குடிகொண்டிருந்தது.

மேலும் படிக்க | விஷாலுக்கு எதிராக உயர்நீதிமன்றம் உத்தரவு!

என் கதாநாயகன், தமிழகத்தின் விடிவெள்ளி உதயநிதி ஓடி வந்து கட்டி அணைத்தான். பாலுள்ளம் கொண்ட என் தம்பியை அணைத்துக் கொண்டேன். ஒரு அறையைத் திறந்து 'அண்ணனுக்கு ஒரு காபி சொல்லுங்க' என்று சொல்ல, இரண்டு நிமிடங்களில் காபி வர, நான் உதய்யின் கண்களைப் பார்த்து 'என்ன உதய் கண்ணெல்லாம் வீங்கியிருக்கு? தூங்கலையா?' எனக் கேட்க, 'தூங்க டைம் இல்ல சார்' என்று சொல்லி நான் ரசிக்கும் அழகு புன்னகையை உதிர்க்க... 'அப்பா கூப்டுறார்' என ஒருவர் வந்து சொல்ல, நாங்கள் உள்ளே சென்றோம். இந்த மாநிலத்தின் தந்தையைப் பார்த்தேன். 'நல்லாருக்கிங்களா மிஷ்கின்?' என்று என்னைக் கட்டி அணைத்தார். இங்கு உட்காருங்கள் என வலதுபுறம் சோபாவைக் காட்ட, அந்த கைகளை முத்தமிட்டு அமர்ந்தேன்.

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Mysskin (@directormysskin)

 

புன்னகையுடன் 'எங்க ஆட்சி எப்படி இருக்கு மிஷ்கின்?' எனக் கேட்க… அதிர்ந்து போனேன். 'இதுவரை திராவிடத்தில் இவ்வளவு அமைதி நிலவியதில்லை. ஊரே உங்களைக் கொண்டாடுகிறது. ஏன், எதிர் கட்சிக்காரர்கள் கூட உங்களை வணங்குகிறார்கள். மக்கள் அனைவரும் உங்களை மனதார போற்றுகிறார்கள்' என்று சொன்னேன். அதற்கு அவர் 'அந்த நம்பிக்கைதான் எனக்கு ரொம்ப பயம் கொடுக்குது. தமிழ்நாட்டு மக்களுக்கு இன்னும் நான் என்ன நல்லது செய்ய போறேன், எப்படிச் செய்ய போறேன் என நான் யோசித்துக் கொண்டே இருக்கிறேன்' என்று அவர் ஒரு குழந்தை போல் சொல்ல, என் கண்கள் பனித்தன.!

மேலும் படிக்க | ’அந்த வாழ்க்கையை விரும்பவில்லை’ - சன்னிலியோனின் எமோஷ்னல் விளக்கம்

அதற்கு மேல் வார்த்தை வராமல், கையெடுத்துக் கும்பிட்டு வெளியே வந்தேன். என் தம்பி ஆதித்யா காரை ஸ்டார்ட் செய்ய, நான் கதவைத் திறந்து உள்ளே ஏறும் முன், 'இந்த மனுஷன் 100 வருஷம் நல்லா வாழனும்' என்று இயற்கையை வேண்டி கதவைச் சாத்த, அந்த கார் மெதுவாக நகர்ந்தது. அந்த மாலை மிகவும் அழகாக இருந்தது.’

இவ்வாறு அந்த பதிவில் மிஷ்கின் எழுதியுள்ளார். விரைவில் உதயநிதி ஸ்டாலினை வைத்து மிஷ்கின் படம் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News