'ஏழைத்தாயின் சிரிப்பு...' வைரல் வேலம்மாள் பாட்டி காலமானார் - முதல்வர் இரங்கல்

Velammal Paati: தன் முகம் ததும்பிய புன்னகையால் வைரலாகி, தமிழக அரசின் சாதனை விளம்பர போஸ்டர்களில் மீண்டும், மீண்டும் இடம்பிடித்து வந்த வேலம்மாள் பாட்டி உடல்நலக் குறைவால் நேற்றிரவு உயிரிழந்தார்.

Written by - Sudharsan G | Last Updated : Jul 28, 2023, 10:26 AM IST
  • அவருக்கு வயது 92.
  • வயது மூப்பு காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
  • அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவில் வீடு ஒதுக்கப்பட்டது.
'ஏழைத்தாயின் சிரிப்பு...' வைரல் வேலம்மாள் பாட்டி காலமானார் - முதல்வர் இரங்கல் title=

Viral Velammal Paati: ஒரு மனிதரை சந்திருக்கவே மாட்டோம். அவர்கள் குறித்தும் நம் அக்கம்பக்கதிலோ, நண்பர்களாலோ, ஊடகத்தின் மூலமாகவோ அல்லது பொதுப்பேச்சிலோ ஏதாவது ஒரு விஷயத்தை மட்டும் கேட்டிருப்போம். ஆனால் அவர்கள் நம் மனதில் ஆழமாக பதிந்துவிடுவார்கள். 

இன்றைய சமூக வலைதள யுகத்திலும் ஒருவர் டிரெண்டிங்கில் வந்துவிட்டால் அவரை மறப்பதே கஷ்டம்தான். அவரை வைத்து மீம்ஸ், மீம் வீடியோக்களை பேஸ்புக், ட்விட்டர், யூ-ட்யூப், இன்ஸ்டாகிராம் என அனைத்திலும் சுற்றி சுற்றி வந்துகொண்டே இருக்கும். அதுவும் நல்ல விஷயங்களை விட சற்று வெறுப்பை உமிழும் வைரல் செய்திகள் தான் அதிகமானோரை சென்றடைகிறது. இருப்பினும், சில இயல்பான விஷயங்களும் அவ்வப்போது வைரலாகும். அந்த வகையில், வேலம்மாள் பாட்டியின் இயல்பான சிரிப்பு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வைரலானது. இந்நிலையில், அந்த வேலம்மாள் பாட்டி உடல்நலக்குறைவால் நேற்றிரவு காலமானார். 

யார் இந்த வேலம்மாள் பாட்டி?

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹெர்பி. கொரோனா காலக்கட்டத்தில் நோயாளிகளின் சிகிச்சை அறைக்குள் நுழைந்து புகைப்படம் எடுத்ததில் தொடங்கி, முதன்முதலில் கொரோனா நோயாளி இறப்புக்குப் பின் எரியூட்டப்படுவது வரை புகைப்படமாகவும், வீடியோவாகவும் எடுத்து வெளியிட்டிருந்தார். அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு போய்ச்சேரும் வகையில் தனித்திறன்மிக்க புகைப்படங்களாக எடுப்பது ஜாக்சன் ஹெர்பியின் வழக்கம்.

மேலும் படிக்க | மணிப்பூர் டூ சென்னை... தப்பிவந்த 9 பேர் குடும்பம் - அடைக்கலம் கொடுத்தவருக்கு பாராட்டு!

அந்தவகையில், கொரோனா நிவாரணத்தொகையான 2000 ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு மலர்ந்த முகத்துடன் சென்ற வேலம்மாள் என்னும் பாட்டியை ஜாக்சன் ஹெர்பி எடுத்த படம் வைரல் ஆனது. இதன் மூலம் வேலம்மாள் பாட்டியும் பேமஸ் ஆனார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினே இந்தப் புகைப்படத்தை இந்த 'ஏழைத்தாயின் சிரிப்பே... நம் ஆட்சியின் சிறப்பு' எனத் தன் சமூக வலைதளப் பக்கங்களில் பதிவு செய்தார்.

வயது மூப்பு 

கடந்த ஆண்டு மழை பாதிப்பினைப் பார்வையிட குமரிக்கு வந்த முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்த வேலம்மாள் பாட்டி, தான் வீடு இல்லாமல் கஷ்டப்படுவதாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அவருக்கு அரசு சார்பில் அஞ்சுகிராமம் பகுதியில் வீடு ஒதுக்கப்பட்டது. அதற்கு கட்டவேண்டிய குறைந்தபட்ச தொகையையும் திமுக நிர்வாகியான பூதலிங்கம்பிள்ளை என்பவரே செலுத்தி இருந்தார். 

தற்போது நாகர்கோவில் புத்தேரி பகுதியில் வசித்துவந்த வேலம்மாள் பாட்டி, கடந்த சிலதினங்களாகவே வயது மூப்பின் காரணமாக ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தவித்து வந்தார். இந்தநிலையில் நேற்று இரவு அவர் உயிரிழந்தார். வைரல் பாட்டி வேலம்மாள் உயிர் இழந்த சம்பவம் அப்பகுதிவாசிகளிடம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

முதல்வர் இரங்கல்

வேலம்மாள் பாட்டி மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட இரங்கல அறிக்கையில், "கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி மறைந்தார் என்ற செய்தியறிந்து வருத்தமுற்றேன். கொரோனா பேரிடர் கால நிவாரணமாகக் கழக அரசு வழங்கிய நிவாரணத் தொகையைப் பெற்ற போது, மக்களின் எண்ணங்களைப் பிரதிபலித்த அவரது புன்னகை வழியாக அவர் என்றும் நம்மிடையே நிலைத்திருப்பார். அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்" என குறிப்பிட்டுள்ளார். 

மேலும் படிக்க | மின்கம்பம் விழுந்து விபத்து... துண்டான விளையாட்டு வீரரின் கால் - கதறும் தாய்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News