சசிகலா எடுத்த ஜெயலலிதாவின்' சிகிச்சை பெற்று வந்த வீடியோ பதிவு என்னிடம் உள்ளது,'' என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
இன்று சென்னை அடையாறு இல்லத்தில் அவர் அளித்த முழு பேட்டி விவரம்:-
கட்சி பிரச்னை தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் 29-ம் தேதி ஆவணங்களை தாக்கல் செய்வோம். அப்போது உங்களுக்கு தெரிய வரும். அமைச்சர்கள் பொதுக்குழுவை கூட்ட அதிமுக சட்ட விதிகளில் இடம் இல்லை. இரட்டை இலை சின்னத்தை யாரும் பயன்படுத்த கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலா உள்ளார். துணை பொதுச் செயலாளராக நான் உள்ளேன். கட்சியின் விதிகளின்படி பொதுக்குழுவை, பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தால், பொதுச் செயலாளர் கூட்டுவார்.
எம்.ஜி.ஆர்., உயிருடன் இருந்த போது, அவரை எதிர்த்து அரசியல் செய்த தியாக தொண்டர் தான் அமைச்சர் ஓ.எஸ்.மணியன். இவர்களின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
ஜெயலாலிதா சிகிச்சை பெற்றது தொடர்பான சிசிடிவி காட்சிகள் எங்கள் வசம் உள்ளது, பொதுச்செயலாளர் சசிகலா ஒப்புதல் இல்லாமல் காட்சிகளை வெளியிட முடியாது. விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டால் இந்த சிசிடிவி காட்சிகளை ஒப்படைக்க தயார்.
அந்த வீடியோவை எடுத்தது சசிகலா தான். நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை ஒப்படைக்கலாம் என சசிகலா என்னிடம் கூறினார். ஜெயலலிதா நைட்டி அணிந்து இருந்ததால் அந்த வீடியோவை இதுவரை வெளியிடவில்லை.
இவ்வாறு தினகரன் கூறினார்.