நாடு தழுவிய சமூகநீதிக் கூட்டமைப்பு: 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு

ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது என சமூக நீதிக்காக அனைவரும் ஒன்றுபடுங்கள் என முதலமைச்சர் கடிதம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 2, 2022, 02:35 PM IST
  • ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டும்.
  • எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும்.
  • சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி நம்பிக்கை கொண்ட நாம் ஒன்றிணைய வேண்டும்.
நாடு தழுவிய சமூகநீதிக் கூட்டமைப்பு: 37 கட்சிகளுக்கு முதலமைச்சர் அழைப்பு title=

சென்னை: அனைத்திந்திய சமூக நீதி கூட்டமைப்பில் இணையுமாறு அதிமுக, காங்கிரஸ், பாமக உட்பட 37 கட்சித் தலைவர்களுக்கு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்பு தொடங்கப்படும் என குடியரசு தினத்தன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதனை முன்னெடுத்து செல்லும் விதமாக நாடு முழுவதும் உள்ள 37 அரசியல் கட்சிகளை சேர்ந்த தலைவர்களை "அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமை"ப்பில் இணைய வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக திமுக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு கடிதத்தின் முக்கிய அம்சங்கள்: 

எல்லாருக்கும் எல்லாம் என்பதை அடிப்படையாய்க் கொண்டதுதான் சமூகநீதியாகும். சமூகநீதி என்பது அனைவருக்கும் சமமான பொருளாதார, அரசியல், சமூக உரிமைகளும் வாய்ப்புகளும் அமையவேண்டும் என்ற எண்ணம்தான். அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் என்பதை உறுதிசெய்வதன் வழியாகத்தான் நமது அரசியல் சட்டத்தை இயற்றியவர்கள் காண விரும்பிய சமத்துவச் சமுதாயத்தை கட்டியமைக்க முடியும்.

தமிழகத்தில், வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் சமூகநீதிக்கான விதைகளை மக்களின் மனங்களிலும் எண்ணங்களிலும் விதைத்து, தந்தை பெரியார் எனும் பகுத்தறிவுச் சுடர் ஏற்படுத்திய சமூகநீதிப் புரட்சியை இம்மண்ணின் ஒவ்வொரு துகளும் விவரிக்கும். 

அசைக்க முடியாத சமூகநீதிக்கான தத்துவம்தான் கடந்த எண்பது ஆண்டுகளாகத் தமிழ்ச் சமூகத்தின் அடித்தளமாக விளங்கி அதன் அரசியலை பண்படுத்தி வந்துள்ளது. 

சமத்துவமின்மையை ஒழித்து அனைத்துத் துறைகளிலும் இம்மாநிலத்தை (தமிழ் நாடு) முன்னேற்ற முடிந்ததென்றால் அதற்குக் காரணம் சமூகநீதித் தத்துவத்துக்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம்தான்.

தனித்தன்மை மிக்கதும் பன்முகத்தன்மை வாய்ந்த பல பண்பாடுகளால் ஆனதுமான நமது ஒன்றியம் பிரிவினை மற்றும் சமய மேலாதிக்கத்தினால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. 

சமத்துவம், சுயமரியாதை மற்றும் சமூகநீதி ஆகியவற்றில் நம்பிக்கை கொண்டுள்ள நாம் அனைவரும் ஒன்றிணைந்தால்தான் இவற்றை எதிர்த்துப் போரிட முடியும். 

இது அரசியல் ஆதாயம் பற்றியதல்ல; மாறாக நமது குடியரசு அமையப் பாடுபட்டோர் காண விழைந்த அடையாளத்தை மீண்டும் நிலைநிறுத்துவது பற்றியது ஆகும்.

சமூகநீதியை உறுதிசெய்ய இடஒதுக்கீடு மட்டுமே போதுமானதல்ல. சமூகத்தின் பொதுநீரோட்டத்தில் இருந்து விலக்கப்பட்டு நூற்றாண்டுகளாய் எதிர்கொண்ட அடக்குமுறையை உடைத்தெறிய வேண்டும். அதற்காக ஒவ்வொரு படியிலும் சில சிறப்புரிமைகள் தரப்பட வேண்டும். 

சாதிப் பாகுபாட்டுடன் பாலினப் பாகுபாட்டை ஒழிக்கவும்; மாற்றுத்திறனாளிகள் பொதுநீரோட்டத்தில் இணைந்து போட்டியிடக் கூடிய வகையிலும் நாம் முயற்சிகளை மேற்கொண்டாக வேண்டும்.

சமூகநீதி குறிக்கோள்களை அடைய, உண்மையாகவே மாநிலங்களாலான ஒன்றியமாக நாம் இணைந்து நிற்க வேண்டிய நேரம் இது. 

மண்டல் ஆணையத்தை அமைக்க ஒற்றுமையுடன் நாம் காட்டிய அதே உறுதிப்பாட்டையும் நோக்கத்தையும் இப்போதும் வெளிப்படுத்தியாக வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும், வாய்ப்புக்கான கதவுகள் திறக்கப்படுவதற்காக ஒடுக்கப்பட்ட சமூகங்கள் ஆவலுடன் உள்ளன. 

இந்தியாவில் சமூகநீதிக் கருத்தியலை முன்னெடுத்துச் செல்வதற்கான திட்டத்தை வார்த்தெடுப்பதற்கும்; இன்னும் சிறப்பாகச் செயல்படக் கூடிய பகுதிகளைக் கண்டறிவதற்கும்; அனைத்து மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க குறைந்தபட்ச செயல்திட்டத்தை உருவாக்குவதற்குமான தளமாக இக்கூட்டமைப்பு விளங்கும்.

ஒடுக்கப்பட்டோருக்கு உண்மையான பொருள்பொதிந்த சமூகநீதி சென்றடைய நாம் ஒன்றுபட்டு இருந்தால்தான் முடியும். ஒடுக்கப்பட்டோர் நலனை உறுதிசெய்ய முற்போக்கு ஆற்றல்கள் கைகோக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். 

ஆகவே, தங்கள் அமைப்பில் இருந்து இந்த அனைத்திந்திய சமூகநீதிக் கூட்டமைப்புக்கான பிரதிநிதிகளாகத் தக்க நபர்களை நியமிக்குமாறு அக்கறையுடன் கோருகிறேன். 

இம்முன்னெடுப்பில், எங்களுடன் நீங்களும் இணைய உங்களை வரவேற்க நான் எதிர்நோக்குகிறேன்" என்று தனது கடிதத்தில் முதலமைச்சர் மு,க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News