சென்னை: நாடு முழுவதும் 60 தொகுதிக்கு மேலாக இடைத்தேர்தலும், இரண்டு மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்த வரை நாங்குநேரி (Nanguneri) மற்றும் விக்கிரவாண்டி (Vikravandi) தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதேபோல புதுச்சேரியில் உள்ள காமராஜ் நகர் (Kamaraj Nagar) தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தொகுதிகளுக்கு அக்டோபர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் (By-Elections) நடைபெற உள்ளது. ஆனால் தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ள இரண்டு தொகுதியிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜக, இடைத்தேர்தலை குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
தமிழகத்தில் நடக்க உள்ள இடைத்தேர்தலை குறித்து பாஜகவின் நிலைப்பாடு என்ன என்று இதுவரை தெளிவிப்படுத்த வில்லை. இந்த நேரத்தில் தமிழிசை சவுந்தரராஜன் இருந்திருந்தால் பாஜகவின் திட்டம் மற்றும் நிலைப்பாடு குறித்து அறிவிப்பை வெளியிட்டு இருப்பார். ஆனால் தற்போது உள்ள தமிழக பாஜக தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர். ஏனென்றால் கடந்த ஒரு மாதமாக தமிழக பாஜக தலைவர் பதவிக்கு யாரையுமே நியமிக்கப்படவில்லை. அதுக்குறித்து சில பாஜக தலைவர்களிடம் கேட்டபோது, விரைவில் நியமிக்கப்படுவார்கள் எனக் கூறுகின்றனர் தவிர மற்ற விசியத்தை பற்றி பேச மறுக்கிறார்கள்.
தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதில் தாமதத்திற்கு என்ன காரணம் என்று மற்ற கட்சி நிர்வாகிடம் விசாரித்த போது, காஷ்மீர் விவகாரம், ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களின் சட்டசபை தேர்தல் போன்ற விசியத்தில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஈடுபட்டு உள்ளதால், தமிழக பாஜக தலைவர் குறித்து இறுதி முடிவு எடுக்கவில்லை என்றும், தற்போது தமிழக பாஜக தலைவராக நியமிக்க ஒருவரை அமித்ஷா தேர்ந்தெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழக பாஜகவில் ஹெச்.ராஜா, ராகவன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன், பொன். ராதாகிருஷ்ணன் போன்றோர்களின் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால் மக்களுக்கு நன்கு பரிச்சயமான மற்றும் செல்வாக்கு மிக்க ஒருவரை தலைவராக நியமிக்க பாஜக தலைமை முடிவு செய்துள்ளது. அந்த வரிசையில் பார்த்தால் தமிழக பா.ஜ.க.வின் மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வரும் வானதி சீனிவாசன் மற்றும் கொங்கு மண்டலத்தில் பிரபலமாக இருக்கும் சி.பி.ராதாகிருஷ்ணனும் உள்ளனர். விரைவில் இவர்களில் யாரோ ஒருவர் தான் தமிழக பாஜக தலைவராக நியமிக்க வாய்ப்பு உள்ளதாத் தெரிகிறது.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான குமரி அனந்தனின் மகளான தமிழிசை சவுந்தரராஜன், பாஜகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர. அவர் கடந்த 2014 முதல் தமிழக பாஜக தலைவராக இருந்து வந்தார். தற்போது அவர் தெலங்கானா ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்க்குவதற்கு முன்பாகவே தமிழக பாஜக தலைவர் பதவி மற்றும் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். இதனையடுத்து செப்டம்பர் 8 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆளுநராக பதவி ஏற்றுக்கொண்டார் தமிழிசை சவுந்தரராஜன். இதன் மூலம் தெலங்கானாவின் முதல் பெண் ஆளுநர் என்னும் பெருமையினையும் அவர் பெற்றார்.