பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் :சசிகலாபுஷ்பா பேட்டி

Last Updated : Aug 29, 2016, 11:04 AM IST
பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் :சசிகலாபுஷ்பா பேட்டி title=

அதிமுகவை சேர்ந்த சசிகலா புஷ்பா டில்லி விமான நிலையத்தில் திமுக எம்பி திருச்சி சிவாவை கன்னத்தில் அறைந்தார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டது. இந்த சம்பவத்தை அடுத்து அவர் அதிமுக பொது செயலர் ஜெயலலிதாவை சந்தித்தார். பிறகு அதிமுக-வில் இருந்து நீக்கப்பட்டார். மேலும் அவரை தனது ராஜ்யசபா எம்பி பதவி ராஜினாமா செய்ய வேண்டும் என அதிமுகவால் நிர்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் தனக்கு மிரட்டல் வருவதாக சசிகலா ராஜ்யசபாவில் அழுதபடி கூறினார். 

இந்நிலையில் சசிகலா புஷ்பாவின் வீட்டில் வேலைபார்த்த இளம்பெண் பானுமதியும் அவருடைய சகோதரி ஜான்சிராணி ஆகியோர் சசிகலாபுஷ்பா குடும்பத்தினர் தங்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் செய்தனர். இதுதொடர்பாக சசிகலாபுஷ்பா, அவருடைய கணவர் லிங்கேஸ்வரன், மகன் பிரதீப்ராஜா, சசிகலா புஷ்பாவின் தாயார் கவுரி ஆகியோர் மீது புதுக்கோட்டை அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யாமல் இருக்க முன் ஜாமின் கேட்டு மதுரை ஐகோர்ட் கிளையில்  சசிகலா புஷ்பா குடும்பத்தினர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதி வரும் 29-ம் தேதி திங்கட்கிழமை கோர்ட்டில் ஆஜராக வேண்டும். அந்நாளில் ஜாமின் குறித்து முடிவு செய்யப்படும் என நீதிபதி வேலுமணி தெரிவித்தார்.

இந்த உத்தரவுக்கு எதிராக சசிகலா புஷ்பா சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார். இதில் தம் மீதான குற்றச்சாட்டு பல ஆண்டுகளுக்கு முன்னதாக கூறப்பட்டது; தற்போது கிளப்பி சதி செய்கின்றனர். தமிழகத்தில் சென்று ஆஜராக அச்சம் இருப்பதாகவும், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்தார்.மனுவை தலைமை நீதிபதி தாக்கூர் தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது. இந்த விசாரணைக்கு பின்னர் நீதிபதிகள் அளித்த உத்தரவில் கூறியதாவது சசிகலா புஷ்பா வரும் 29-ம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஆஜராக வேண்டும். அதே நேரத்தில் அவரை கைது செய்வதற்கு 6 வார காலம் தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்ற உத்தரவை அடுத்து இன்று காலை 7.30 மணிக்கு மதுரை விமான நிலையத்துக்கு வந்த சசிகலா புஷ்பா எம்.பி.க்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளித்தனர். 

அப்போது பேசிய சசிகலாபுஷ்பா கூறியதாவது:- உச்சநீதிமன்ற உத்தரவின்பேரில் மதுரைக்கு வந்துள்ளேன். நிலுவையில் உள்ள வழக்கு குறித்து இப்போது எதுவும் பேச முடியாது. போலீசார் நாள்தோறும் எனது வீட்டுக்கு வந்து மிரட்டுகிறார்கள். பொய் வழக்கு போடுவதாகவும் அச்சுறுத்துகிறார்கள். அரசியலுக்கு பெண்கள் வருவதே கஷ்டம். வருகிற பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். 

தற்கொலை செய்யப்பட்ட டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா, சென்னை பெண் என்ஜினீயர் சுவாதி ஆகியோருக்கு ஏற்பட்ட சம்பவங்கள் பெண்களுக்கு எதிரான கொடுமைகள் ஆகும். நான் நேர்மையாக இருந்ததால் என் மீது எந்த வழக்கும் போட முடியவில்லை. தேவையில்லாமல் தொல்லை கொடுக்கிறார்கள். எனது வீட்டுக்கு போலீசார் சென்று கணவர், பிள்ளைகள், எல்லோரையும் தொல்லை பண்ணுகிறார்கள். செல்போனை கூட பிடுங்கி பார்த்திருக்கிறார்கள். போலீசுக்கு இதுதான் வேலையா? சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எவ்வளவோ இருக்கிறது. அதையெல்லாம் விட்டுவிட்டு என் வீட்டையே சுற்ற வைப்பதா? இது அதிகார துஷ்பிரயோகம் இல்லையா?

கடந்த 1-ம் தேதி முதல் எனது வீட்டில் கணவர், பிள்ளைகள், உறவினர்கள் அனைவருக்கும் நிம்மதி இல்லை. போலீஸ் தொல்லையால் பிள்ளைகள் பயந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து இந்த மாதிரி நெருக்கடி வந்தால் நானும் வழக்கு போட வேண்டியது வரும். ஏனென்றால் நான் பாதிக்கப்பட்டவள். ஒரு பாராளுமன்ற உறுப்பினரை கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய சொன்னதே தவறு தானே. நான் ஒரு போதும் எம்.பி. பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன். எனக்கு தொல்லைகள் தொடர்ந் தால் அதுபற்றி பாராளுமன்ற த்தில் பேசுவேன். ஊடகங்கள் தங்களது பணிகளை சரியாக செய்வதன் காரணமாக இரவில் கூட பெண்கள் பாதுகாப்பாக நடமாட முடிகிறது என அவர் கூறினார்.

Trending News