ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதலை பெறாமல் சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்து ஜனநாயகப் படுகொலையை அரங்கேற்றி விட்டனர் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!!
கடந்த சில நாட்களாக ஏற்பட்டு வந்த பரபரப்பு இன்று விடை கிடைத்துள்ளது. காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370, 35A-வை ரத்து செய்ய மத்திய அமைச்சரவை முடிவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்தார். இதற்கு காங்கிரஸ், திமுக உட்பட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இது குறித்து உள்துறை அமைச்சர் ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில், "நோக்கம் மற்றும் விளக்கத்தின் அறிக்கை", "ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் லடாக் பிரிவு ஒரு பெரிய பரப்பளவைக் கொண்டுள்ளது. ஆனால், மிகக் கடினமான நிலப்பரப்பைக் கொண்டிருக்கிறது. லடாக் மக்கள் தங்கள் அபிலாஷைகளை உணர உதவும் வகையில் யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்தை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. லடாக் யூனியன் பிரதேசம் சட்டமன்றம் இல்லாமல் இருக்கும்.
"மேலும், தற்போதுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தால் தூண்டப்பட்ட தற்போதைய உள்நாட்டு பாதுகாப்பு நிலைமையைக் கருத்தில் கொண்டு, ஜம்மு-காஷ்மீருக்கான தனி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டு வருகிறது. ஜம்மு-காஷ்மீரின் யூனியன் பிரதேசம் சட்டமன்றத்துடன் இருக்கும்" என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த முடிவிற்கு பலரும் தங்களின் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்; ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒப்புதல் இல்லாமல் 370 சட்டப்பிரிவு நீக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஜம்மு-காஷ்மீரை இரண்டாக பிரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. ஜம்மு-காஷ்மீர் மக்களுடன் கலந்தாலோசிக்காமல், 370 வது பிரிவு பறிக்கப்பட்டுள்ளது. இந்த ஜனநாயக படுகொலைக்கு அதிமுக துணை போயிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இனிமேல் அதிமுக என்ற பெயரை மாற்றி அகில இந்திய பாரதிய ஜனதா கட்சி என வைத்து கொண்டால் நன்றாக இருக்கும். காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு வரும் வரை குடியரசுத் தலைவர் இந்த அறிவிப்பை நிறுத்தி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
MK Stalin, DMK President: Without consulting people of Jammu and Kashmir, Article 370 has been taken away. Democracy has been murdered. AIADMK is also supporting the decision which is condemnable. pic.twitter.com/mnMbGMJGjv
— ANI (@ANI) August 5, 2019