குறட்டை பிரச்சனையால் உலகம் முழுக்க பல்வேறு பிரச்சனை ஏற்படும் நிலையில், அமெரிக்க நிறுவனம் இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய ஸ்மார்ட் மெத்தையை அமெரிக்க நிறுவனம் உருவாக்கியிருக்கிறது.
இதில் உறங்குபவர்களின் குறட்டை பிரச்சனையை தானாக சரி செய்து, சவுகரியமான உறக்கத்தை வழங்குகிறது.
லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று வரும் சி.இ.எஸ். 2018 விழாவில் இந்த மெத்தை அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அமெரிக்காவில் இதன் விலை 4000 டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் ரூ.2,54,420 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மெத்தையினுள் பொருத்தப்பட்டிருக்கும் இரண்டு ஏர்-சேம்பர்கள், இரவில் உறங்கும் போது உடல் அசைவுகளுக்கு ஏற்ப மெத்தையை தானாக மாற்றியமைத்து கொள்ளும் படி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் வழங்கப்பட்டிருக்கும் தானியங்கி அம்சம் குறட்டையை கண்டறிந்து, உறங்குபவர்களுக்கு ஏற்ப மெத்தையை மாற்றும்.
உதாரணத்திற்கு ஸ்மார்ட் மெத்தையில் ஒருவர் குறட்டை விடும் போது, இந்த மெத்தை அதில் உறங்குபவரின் தலையை ஏழு கோணம் அளவு உயர்த்தும். இவ்வாறு செய்யும் போது அடிப்படையில் ஒருவர் குறட்டை விட காரணங்களாக இருக்கும் உடல் அசைவுகள் மாற்றப்பட்டு குறட்டை கட்டுப்படுத்தப்படுகிறது.
மேலும் இந்த மெத்தை அதனை பயன்படுத்துவோரின் நேர வழக்கத்தை அறிந்து கொண்டு மெத்தையின் அடிபாகத்தை வெப்பமாக்கும். இதில் வழங்கப்பட்டிருக்கும் ஸ்மார்ட் அலாரம் அம்சம் உறங்குபவர் எழ வேண்டிய நேரத்தில் எழுப்பி விடும். சி.இ.எஸ். வீட்டு உபயோக பொருட்கள் பிரிவில் சிறந்த கண்டுபிடிப்புக்கான விருது ஸ்மார்ட் மெத்தைக்கு வழங்கப்பட்டது.