பைடன் - கமலா ஹாரீஸ் இடையே மோதல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

அமெரிக்காவில் அதிபர் ஜோ பைடனுக்கும், கமலா ஹாரீஸூக்கும் இடையேயான பனிப்போர் நாளுக்கு நாள் வளர்ந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன  

Written by - ZEE Bureau | Last Updated : Nov 20, 2021, 07:05 PM IST
பைடன் - கமலா ஹாரீஸ் இடையே மோதல் - அமெரிக்காவில் என்ன நடக்கிறது?

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பை வீழ்த்திய பைடன் - கமலா ஹாரீஸ் கூட்டணி கம்பீரமாக வெள்ளை மாளிகையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது. அதிபராக பைடன், துணை அதிபராக கமலா ஹாரீஸ் பதவியேற்றுக் கொண்டனர். இருவரும் நல்ல புரிதலுடன் ஒருங்கிணைந்து ஆட்சியை நடத்தி வருவதாக நம்பப்பட்ட நிலையில், அவர்களுக்கு இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது அந்தப் பனிப்போர் நாளுக்கு நாள் வளர்ந்து மெல்ல வெளியே தெரியத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன. 

துணை அதிபருக்கும், அவருடைய அதிகாரிகளுக்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை என கூறப்படுகிறது. அதிபர் பைடன் அதிகாரிகள், துணை அதிபரின் தலையீடுகள் மற்றும் முடிவுகளால் அதிருப்தியை கொண்டுள்ளதாக தெரிகிறது. அதற்கு முக்கிய காரணம், கமலா ஹாரீஸின் அனைத்து முடிவுகளும் அவர் எடுக்காமல் குடும்ப உறுப்பினர்களை பெருமளவு சார்ந்திருப்பதாக சுட்டிக்காட்டப்படுகிறது. மாயா ஹாரீஸ், டோனி வெஸ்ட், மீனா ஹாரீஸ் ஆகியோர் அதிகாரப்பூர்வமற்ற முறையில் ஹாரீஸின் அலுவல் பணிகளில் தலையிடுவதாகவும், நியமனங்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அவர்கள் முடிவெடுப்பதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இது பைடனுக்கு, அவரது அதிகாரிகளுக்கும் பிடிக்கவில்லை. மேலும், செல்வாக்கு அடிப்படையிலும் பைடனுக்கு சில அதிருப்திகள் இருப்பதாக கூறப்படுகிறது.

kamala

ஏனென்றால், அடுத்த அதிபர் தேர்தலின்போது பைடனுக்கு 86 வயதாகிவிடும். அதனால் அவர் போட்டியிட வாய்ப்பில்லை என்பதால், இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கட்சிக்குள் தன்னை செல்வாக்கு மிக்கவராக காட்டிக்கொள்ள முற்படுவதாகவும் பைடன் ஆதரவாளர்கள் தரப்பில் குற்றச்சாட்டாக வைக்கப்படுகிறது. ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர், நிர்வாக ரீதியாக இன்னும் முழுமையான பணியை அவர் மேற்கொள்ளாமல், குடும்ப உறுப்பினர்கள் வழிகாட்டலில் முடிவெடுப்பது தவறானது என குற்றச்சாட்டு வைத்துள்ள பைடன் ஆதரவாளர்கள், அதிருப்தியில் இருக்கும் அதிபர் தக்க சமயத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது. 

ஆப்கானிஸ்தான் விவகாரம், பொருளாதார மந்தநிலை மற்றும் கொரோனா விவகாரம் பெரும் தலைவலியாக இருப்பதால் இப்போதைக்கு, கமலா ஹாரீஸ் உடனான பனிப்போருக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை எனவும் பைடன் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். அதேநேரத்தில், துணை அதிபருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட, அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருப்பவருக்கு பைடன் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார் என்ற குற்றச்சாட்டு கமலா ஹாரீஸ் தரப்பில் இருந்து வைக்கப்படுகிறது. பைடன் ஆதரவு அதிகாரிகள் வேண்டுமென்றே துணை ஜனாதிபதிக்கான உதவியாளர்களை புறக்கணிப்பதாக தெரிவிக்கின்றன. அதிபர் ஜோ பைடன் வேண்டுமென்றே கமலா ஹாரீஸின் செல்வாக்கை குறைக்க முயற்சி செய்கிறார் எனத் தெரிவிக்கும் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள், இளைஞர்களின் எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் கமலா ஹாரீஸ் இருக்கிறார் என புகழாரம் சூட்டுகின்றனர். அவர் ஆற்றமிக்க தலைவர், கறுப்பின பெண் தலைவருக்கான தேடல் மக்களிடையே அதிகம் இருப்பதாகவும், அதனை கமலா ஹாரீஸ் சரியாக பூர்த்தி செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.

jeo

முக்கிய விவகாரங்களில் கமலா ஹாரீஸூக்கு பைடன் ஆதரவளிப்பதை அல்லது முக்கியத்துவம் அளிப்பதை தவிர்த்து வருவதாகவும் துணை ஜனாதிபதி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். உலக விவகாரங்களில் கருத்து தெரிவிப்பதிலும் பைடனுக்கும், கமலா ஹாரீஸூக்கும் இருவேறு நிலைப்பாடுகள் இருப்பதும் பனிப்போரின் ஒரு புள்ளியாக அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். ஆனால், இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்ட கற்பனைக் கதைகள் என துணை அதிபர் கமலா ஹாரீஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். கமலா ஹாரீஸூம் பைடனுடனான மோதல் செய்தியை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

ALSO READ 85 நிமிடங்கள் அமெரிக்காவின் அதிபர்- கமலா ஹாரீஸூக்கு கிடைத்த கௌரவம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News