புதுடெல்லி: கொரோனா பெருந்தொற்றால் சர்வதேசங்கள் ஆடிப் போன நிலையில் பல நாடுகளும் போக்குவரத்துகளை நிறுத்தின. நிறுத்தப்பட்ட போக்குவரத்து சேவைகள் படிப்படியாக தளர்த்தப்படும் நிலையில் பல கட்டுப்பாடுகளுடன் அவை மேற்கொள்ளப்படுகின்றன.
உலக அளவில் பல நாட்டு மக்களும் அதிலும் குறிப்பாக தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் சென்று பணிபுரியும் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் பணிபுரியும் மக்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குள்ளாகியுள்ளது.
மார்ச் மாதம் முதல் வெளிநாடுகளுக்கான விமானப் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது இன்று முதல் குவைத் அரசு சர்வதேச விமானப் போக்குவரத்தை தொடங்க அனுமதி கொடுத்துள்ளது.
Read Also | AAVIN Recruitment 2020: மதுரை ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!! எப்படி விண்ணப்பிப்பது?
ஆனால்,இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், வங்கதேசம், இலங்கை, இரான் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள், குவைத்திற்கு பயணம் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி கொடுக்கவில்லை.
இதனால் சுமார் எட்டு லட்சம் இந்தியர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடலாம் என அச்சம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.இந்த விவகாரத்தில் இந்திய அரசு தலையிட்டு சரி செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த தடை தற்காலிகமானது என்றும், இது இந்தியர்களின் மீது மட்டும் விதிக்கப்படவில்லை என்றும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவ் தெரிவித்துள்ளார்.