சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலி எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளதாக சீன அரசு தகவல்!!
சீனாவின் பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள வுஹான் நகரத்தில் அதிகம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 902 பேர் பலியாகி உள்ளனர்.
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் கொரோனா வைரஸ் பரவியது. இதன்பின்னர் பெய்ஜிங் மற்றும் ஷாங்காய் என நாடு முழுவதும் பரவியது. இதனால் தொடர்ந்து உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. சீனாவில் இதுவரை 34 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், கடந்த 2002-2003 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சார்ஸ் வைரஸ் தாக்குதலில் 774 பேரைக் கொன்றது. சார்ஸ் வைரசால் பலியானோர் எண்ணிக்கையை விட கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு நேற்று 81 பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை 803 ஆக உயர்வடைந்தது. இதேபோன்று 2,147 பேர் கூடுதலாக வைரஸ் பாதிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதனால் சீனா முழுவதும் 36,690 பேருக்கும் கூடுதலாக நோய் பாதிப்பிற்கு ஆளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்நிலையில், 91 பேர் உயிரிழந்துள்ள நிலையில் வைரஸ் பாதிப்பிற்கு பலியானோர் எண்ணிக்கை 902 ஆக உயர்ந்துள்ளது. இதேபோன்று 39,800 பேருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது என சீன சுகாதார அதிகாரிகள் இன்று தெரிவித்து உள்ளனர்.