லூனா 25 கொடுத்த ஷாக்: மோசமான ரஷ்ய விஞ்ஞானியின் உடல்நிலை.. மருத்துவமனையில் அனுமதி

Russia Moon Mission: ரஷ்யாவின் பிரபல இயற்பியலாளர், வானியலாளர் மற்றும் ரஷ்யாவின் தோல்வியுற்ற நிலவு பயணத்தின் தலைமை ஆலோசகருமான மிகைல் மரோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 22, 2023, 04:30 PM IST
  • ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து நிலவில் விழுந்து நொறுங்கியது.
  • ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் இதை தெரிவித்துள்ளது.
  • தோல்வியுற்ற நிலவு பயணத்தின் தலைமை ஆலோசகர் மிகைல் மரோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
லூனா 25 கொடுத்த ஷாக்: மோசமான ரஷ்ய விஞ்ஞானியின் உடல்நிலை..  மருத்துவமனையில் அனுமதி title=

ரஷ்யாவின் மூன் மிஷன்: நிலவை நோக்கி ரஷ்யா செலுத்திய லூனா-25 என்ற மூன் மிஷன் தோல்வியடைந்தது ரஷ்யாவிற்கு பெரிய பின்னடைவாக வந்துள்ளது. ரஷ்யாவிற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் உள்ள விண்வெணி ஆராய்ச்சியாளர்களும் விஞ்ஞானிகளும் இதனால் சோகத்தில் உள்ளனர். விண்வெளித்துறையில் நாடுகளுக்கு இடையில் போட்டி இருந்தாலும், இந்த பூமியின் சக மனிதர்கள் என்ற வகையில், இப்படிப்பட்ட பெரிய செயல்திட்டங்கள் வெற்றி அடைந்தால் மகிழ்வதும், தோல்வி அடைந்தால் வருந்துவதும் மனித குலத்தின் இயல்பே!! ஏனெனில், இப்படிப்பட்ட திட்டங்கள் மனித குலத்தின் வெற்றிப்பாதையின் படிக்கட்டுகளாக அமைகின்றன. 

ரஷ்யாவின் லூனா-25 விண்கலம் கட்டுப்பாடற்ற சுற்றுவட்டப் பாதையில் நுழைந்து நிலவில் விழுந்து நொறுங்கியதாக ரஷ்யாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், ரஷ்யாவின் பிரபல இயற்பியலாளர், வானியலாளர் மற்றும் ரஷ்யாவின் தோல்வியுற்ற நிலவு பயணத்தின் தலைமை ஆலோசகருமான மிகைல் மரோவ் மாஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.

லூனா-25 விண்கலம் கட்டுப்பாட்டை இழந்து நிலவில் விழுந்த உடனேயே, மரோவின் உடல்நிலை திடீரெனெ மோசமானதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 47 வருட இடைவெளிக்குப் பிறகு, நிலவின் மேற்பரப்பை அடையும் நோக்கத்துடன் ரஷ்யா லூனா-25 விண்கலத்தை ஏவியது குறிப்பிடத்தக்கது.

'நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்'

தோல்வியுற்ற இந்த முயற்சிக்குப் பிறகு, விண்கலத்தை வெற்றிகரமாக தரையிறக்க முடியாமல் போனது குறித்து மாரோவ் மிகவும் வருத்தப்பட்டு புலம்பினார். ராய்ட்டர்ஸிடம் பேசிய ரஷ்ய விஞ்ஞானி, 'நான் எப்படி கவலைப்படாமல் இருக்க முடியும்? இது என் வாழ்க்கையில் ஒரு பெரிய விஷயம். இவை அனைத்தும் மிக கடினமான விஷயங்கள்.’ என்று கூறினார். லூனா-25 விபத்திற்கான காரணங்கள் குறித்து முழுமையான விசாரணை நடக்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார். 

மேலும் படிக்க | சந்திரயான் 3: எல்லாம் தோல்வியடைந்தாலும் விக்ரம் லேண்டர் தரையிறங்கும் - எப்படி?

விண்வெளித் துறையில் ஒரு மூத்த விஞ்ஞானி என்ற முறையில், 90 வயதான மாரோவ், இந்த மூன் மிஷன் தோல்வி அடைந்ததை குறித்து அதிக ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் தெரிவித்தார். அவர் இந்த மிஷனை ரஷ்யாவின் நிலவு பயணத்தின் மறுமலர்ச்சிக்கான தனது கடைசி வாய்ப்பாக கருதுவதாக அவர் கூறியுள்ளார். ‘நிலவிற்கான எங்கள் திட்டத்தின் மறுமலர்ச்சியைக் காண இதுவே எனது கடைசி நம்பிக்கையாக இருந்தது’ என்றார் மிகைல் மரோவ்.

விசாரணை

லூனா -25 தோல்விக்கான காரணங்களைக் கண்டறிய ரோஸ்கோஸ்மோஸ் அமைத்த சிறப்பு இடைநிலைக் குழு சம்பவம் குறித்த விசாரணையை தொடங்கியுள்ளது.

மேற்கத்திய நாடுகளால் விதிக்கப்பட்டுள்ள தடைகள் மற்றும் ஒரு பெரிய ஐரோப்பிய மோதலில் ஈடுபட்டதன் காரணமாக ரஷ்யா ஏற்கனவே பெரிய அளவிலான பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது. லூனா-25 மூன் மிஷனின் தோல்வி ரஷ்யாவின் சவால்களை இன்னும் அதிகரித்துள்ளது. பல  சவால்கள் இருந்தபோதிலும், ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்கா போன்ற மற்ற உலக சக்திகளுக்கு எதிராக விண்வெளியில் அதன் போட்டித்தன்மையை நிரூபிக்க முயன்றது.

சந்திரயான்-3

இதற்கிடையில், சந்திரயான்-3-ன் லேண்டர் 'விக்ரம்' இப்போது சந்திரனின் தென் துருவத்தில் பெரிய கற்கள் மற்றும் குழிகள் இல்லாத ஒரு இடத்தைத் LHDAC கேமராவுடன் தேடுகிறது. பாதுகாப்பான இடத்தை துல்லியமாக கண்டறியும் பட்சத்தில் புதன்கிழமை மாலை 6:04 மணிக்கு உறுதியாக நிலவின் தென்துருவப் பகுதியில் தரையிறங்கும். விக்ரம் லேண்டரில் உள்ள கேமரா அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தடுக்கும் திறன் கொண்டது என்று இந்திய விண்வெளி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்திருக்கிறது. இந்த கேமராவில் ஏற்கனவே பிக்ஸ் செய்யப்பட்டிருக்கும் தரையிறங்கும் தளத்தை மேப்பிங் செய்து புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்கிறது. அதில் எடுக்கப்பட்ட கருப்பு மற்றும் வெள்ளை படங்கள் பெரிய கற்கள் மற்றும் ஆழமான பள்ளங்கள் இல்லாத தரையிறங்கும் இடத்தைக் கண்டறிய உதவும். இந்த கேமராவின் உதவியுடன், விக்ரம் லேண்டர் நிலவில் இருக்கும் அனைத்து சவால்களையும் தரையிறங்குவதற்கு முன்கூட்டியே பார்க்க முடிகிறது.

மேலும் படிக்க | சந்திரயான்-3: டீபூஸ்டிங் வெற்றி.. நிலவை நெருங்கியது லேண்டர்.. தரையிறங்க இன்னும் ஒரு படிதான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News