கொரோனா (Corona) வைரஸ் மற்றும் அதைத் தடுப்பதற்காக போடப்படும் விதிமுறைகளை கேலி செய்வதில் அமெரிக்க அதிபர் (American President) டொனால்ட் டிரம்பும் அவரது குடும்பத்தினரும் முன்னணியில் உள்ளனர். இப்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே, நிலைமையின் தீவிரத்தை இப்போதுதான் டிரம்ப் குடும்பம் புரிந்துகொண்டுள்ளது. மேலும் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவதிலேயே புத்திசாலித்தனம் உள்ளது என்பதையும் அவர்கள் புரிந்துகொண்டுள்ளார்கள் போலும். அதிபர் டோனால்ட் டிரம்ப் (Donald Trump) சனிக்கிழமை முதல் முறையாக முகக்கவசம் அணிந்து காணப்பட்டார். இப்போது அவரது மனைவி மெலனியா டிரம்பும் (Melania Trump) முகக்கவசத்துடன் தோன்றியுள்ளார்.
மெலனியா தனது சமூக ஊடக கணக்கில் மேரி எலிசபெத் ஹவுஸுக்கு (Mary Elizabeth House) விஜயம் செய்த வீடியோவை வெளியிட்டார். அதில் அவர் முகக்கவசம் அணிந்திருப்பதைக் காண முடிகிறது. தனது ட்வீட்டில், இந்த பயணம் குறித்து வர் எழுதியுள்ளார். “மேரி எலிசபெத் ஹவுஸ் ஊழியர்கள், தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுடன் நேரத்தை செலவழித்தது நன்றாக இருந்தது. மேரி எலிசபெத் ஹவுஸ் குடும்பங்களை வலுப்படுத்த உதவுகிறது, பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளை முன்னோக்கி வளரச் செய்வதில் உதவி புரிகிறது என்பதை அறிந்ததில் மகிழ்ச்சி.” என்று அவர் தெரிவித்துள்ளார்.
ALSO READ: பிடிவாதத்தை விட்டு ஒரு வழியாக மாஸ்க் அணிந்தார் டிரம்ப்... வைரலாகும் Pic..!
நிபுணர்களின் கூற்றுப்படி, டிரம்ப் குடும்பத்தின் சிந்தனையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தின் பின்னால் அரசியல் ஆதாயம் தேடும் முயற்சி ஒளிந்திருக்கிறது. தேர்தலை மனதில் வைத்து, அதிபர் தனது பிம்பத்தை பாதிக்கும் எதையும் செய்ய விரும்பவில்லை. சுகாதார நிபுணர்களின் எச்சரிக்கைகளை புறக்கணித்து, அவர் பேரணியை ஏற்பாடு செய்தார். அதன் எதிர்மறையான முடிவுகளை அனைவரும் கண்டனர். விதிகளைப் பின்பற்றுவது பொது மக்களுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தனக்கும் அது முக்கியம் என்பதை அவர் இப்போது காட்ட விரும்புகிறார். ஏற்கனவே கொரோனா தொற்றின் ஏற்றத்தால் அவர் பல வித விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.
உலக அளவில், கொரோனா வைரஸால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் இந்த நிலைமைக்கு அதிபர் டிரம்பே பெரும்பாலும் பொறுப்பாவார். ஏனென்றால் அவர் ஆரம்பத்தில் இருந்தே கடுமையான நடவடிக்கைகளை எதிர்த்து வருகிறார். அவரே எண்ணற்ற முறை விதிகளை புறக்கணித்துள்ளார். மேலும் அவரது குடும்பமும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில், சுமார் 60 ஆயிரம் பேர் கொரோனாவுக்கு நேர்மறையாகக் கண்டறியப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் இதுவரை 3,263,073 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 134,659 பேர் இறந்துள்ளனர்.