News Tidbits ஆகஸ்ட் 18: இன்றைய தலைப்புச் செய்திகள் சில உங்களுக்காக ...

இன்றைய தலைப்புச் செய்திகள் சில உங்களுக்காக சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Aug 18, 2020, 09:46 PM IST
News Tidbits ஆகஸ்ட் 18: இன்றைய தலைப்புச் செய்திகள் சில உங்களுக்காக ... title=

புதுடெல்லி: இன்றைய தலைப்புச் செய்திகள் சில உங்களுக்காக சுருக்கமாக தொகுத்து வழங்குகிறோம்.

1. தேசிய கல்வி கொள்கை 2020இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திற்கு மறுபெயரிட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இனிமேல், மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கல்வி அமைச்சகம் என்று அறியப்படும். 

2.JEE மற்றும் NEET தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும். தேர்வுகளை ஒத்திவைக்கக் கோரிய மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ஓராண்டு வீணாவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும் என்பதால், கோவிட் 19 நோய்த்தொற்றின் காரணமாக ஒரு கல்வியாண்டை வீணாக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் கருத்து. 

3. கார் தயாரிப்பு நிறுவனங்கள், வெளிநாடுகளில் உள்ள தாய் நிறுவனங்களுக்கு கொடுக்கக்கூடிய ராயல்டியை குறைக்க முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என அரசு வலியுறுத்தியது.

4. தற்சார்பு இந்தியா என்ற லட்சியத்தை அடைய வேளாண் பொருட்கள் ஏற்றுமதியை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் அறிவிப்பு. 

5. உத்திரப்பிரதேசம், பீகார், ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களில் வெள்ளத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. சம்பந்தப்பட்ட மாநிலங்களின் பேரிடர் மேலாண்மை குழுக்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன. பீகாரில் வெள்ள நிலைமை தொடர்ந்து மோசமாக உள்ளது. 

6. தங்கள் நாடுகளில் ராமாயண சுற்றுலாவை ஊக்குவிக்க இந்தியாவும் நேபாளமும் ஒப்புக் கொண்டுள்ளன. 

7. மோதிஹரி-அம்லேக்கஞ்ச் பெட்ரோலிய குழாய் போன்ற திட்டங்களில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தையும் இந்தியாவும் நேபாளமும் ஆய்வு செய்தன.

8. வர்த்தகம், பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான 13வது இந்திய-ஐக்கிய அரபு அமீரக கூட்டு ஆணையக் கூட்டம் காணொளி வாயிலாக நடைபெற்றது. வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மற்றும் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சர் அப்துல்லா பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோர் தத்தமது நாட்டின் பிரதிநிதிகளுக்குத் தலைமை தாங்கினர். 

9. அமெரிக்க அதிபர் தேர்தல் சூடு பிடித்துவிட்டது. 4 நாள் நடைபெறவிருக்கும் மக்களாட்சி தேசிய மாநாடு விஸ்கான்சின் மில்வாக்கியில் தொடங்கியது. கட்சியின் அதிபர் மற்றும் துணை அதிபர் வேட்பாளர்கள் காணொளிக்காட்சி மூலம் மாநாட்டில் கலந்துக் கொள்கின்றனர். 

10. கோவிட் 19 நோய் பாதிப்பு அதிகரித்த பின்னர் ஸ்பெயின், பிரான்ஸ் மற்றும் இத்தாலி உட்பட பல நாடுகள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ளன. இந்த நாடுகளில் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படலாம் என நிபுணர்கள் அச்சம்.

Read Also | Dating Site: விவசாயிகள் முதல் இசை ஆர்வலர்கள் வரை, அவரவருக்கு ஏற்ற துணையை கண்டுபிடிப்பது எளிது

Trending News