அமெரிக்காவின் நிதித் துறையில் உள்ள தேசிய பாதுகாப்புக் குழுவினருடன் ஒபாமா நேற்று ஆலோசனை நடத்தினார்.
அப்போது அவர் கூறியதாவது: சிரியா மற்றும் இராக்கில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பு தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்டு வருகிறது. அதனால் அந்த அமைப்புக்கு எதிராக நமது படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. குறிப்பாக ஐஎஸ் அமைப்புக்கு சொந்தமான எண்ணெய் உற்பத்தி கட்டமைப்புகள் மீது நமது ராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியது.இதன் காரணமாக அந்த அமைப்புக்கு வந்து கொண்டிருந்த பல கோடி டாலர் வருமானம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அமைப்பினர் கரன்சிகளை கையிருப்பு வைத்திருந்த பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தி அழித்து உள்ளோம். இதனால் அந்த அமைப்புக்கு பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. சர்வதேச நிதி நடைமுறையிலிருந்து அந்த அமைப்பு இப்போது துண்டிக்கப்பட்டுள்ளது. தங்களது நிதி கையிருப்பு குறைந்ததால் போராளிகளுக் கான சம்பளத்தை ஐஎஸ் அமைப்பு குறைத்துள்ளது. மேலும் தங்கள் கட்டுப்பாட்டில் சிக்கி உள்ளவர்களை மிரட்டி பணம் பறித்து வருகின்றனர்.
சிரியா மற்றும் இராக்கில் ஐ.எஸ் அமைப்பினர் மீதான தாக்குதல் தீவிரப்படுத்தப் பட்டுள்ளது. இதனால் அந்த அமைப்பைச் சேர்ந்த சுமார் 120-க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்கள் கொல்லப் பட்டுள்ளனர். இதனால் ஐஎஸ் அமைப்பு தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை இழந்து வருகிறது. மேலும், அந்த அமைப்பில் சேரும் வெளிநாட்டு போராளிகள் எண்ணிக்கையும் கணிசமாகக் குறைந்து வருகிறது.
இந்நிலையில் அமெரிக்கா மீதோ அல்லது எங்கள் நட்பு நாடுகள் மீதோ தாக்குதல் நடத்தினால், உங்களை சும்மா விடமாட்டோம் என அவர் தெரிவித்தார்.