அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல்

Ukraine Russia Conflict: மழலையர் பள்ளி கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில், பள்ளியில் உடற்பயிற்சி அறையில் ஷெல் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 18, 2022, 04:00 PM IST
  • அதிகரிக்கிறது ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான பதற்றம்.
  • உக்ரைனின் ஒரு மழலையர் பள்ளியில் ஷெல் தாக்குதல்.
  • தாக்குதலுக்கு பல தரப்புகளிலிருந்து கண்டனம்.
அடுத்த கட்டத்துக்கு செல்லும் உக்ரைன் ரஷ்யா விவகாரம்: மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல் title=

ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், கிழக்கு உக்ரேனிய கிராமமான ஸ்டானிட்சியா-லுகன்ஸ்கா மீது ரஷ்ய பிரிவினைவாதிகள் ஷெல் தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

20 குழந்தைகள் மற்றும் 18 ஊழியர்கள் பயன்படுத்தும் மழலையர் பள்ளியின் சுவரில் ஷெல் வெடிப்பு நடந்தது. குழந்தைகள் உள்ளே இருந்தபோதும் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. அந்த மழலையர் பள்ளியில் இருந்த குழந்தைகள் காயம் ஏதும் ஏற்படாமல் சிறிது நேரத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மழலையர் பள்ளி கட்டிடத்திற்குள் ஊழியர்கள் மற்றும் குழந்தைகள் இருந்த நிலையில், பள்ளியில் உடற்பயிற்சி அறையில் ஷெல் தாக்குதல் நடந்ததாக கூறப்படுகிறது. இரண்டு மாடி கட்டிடத்தில் ஷெல் தாக்குதல் நடந்தவுடன், கட்டிடத்திற்குள் இருந்த அனைவரும் மறுபக்கம் விரைந்து சென்று தரை தளத்தில் சுவரின் அருகில் ஒளிந்து கொண்டனர்.

"உக்ரேனியர்களை இழிவுபடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு தவறான கொடிய நடவடிக்கை இது. ரஷ்ய நடவடிக்கைக்கு ஒரு போலியான ஆத்திரமூட்டலை உருவாக்க வடிவமைக்கப்பட்ட ஒரு தாக்குதல் இது” என்று பிரிட்டிஷ் பிரதமர் ஜான்சன் பிரிட்டிஷ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

அதிபர் வொலொடிமிர் ஸெலென்ஸ்கி, "ரஷ்ய சார்பு படைகளால் ஒரு மழலையர் பள்ளி மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது..... இது தேவையற்ற ஒரு பெரிய நடவடிக்கையாகும்” என கூறியுள்ளார். 

மேலும் படிக்க | Russia-Ukraine crisis: ரஷ்யா படைகளை வாபஸ் பெறவில்லை என அமெரிக்கா குற்றசாட்டு 

டொனெட்ஸ்க் மற்றும் லுகான்ஸ்க் பகுதிகளில் ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்களுடன் உக்ரைன் படைகள் மோதலில் ஈடுபட்டுள்ளன. கடந்த 8 ஆண்டுகளாக உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே தொடர்ந்து பதற்றம் நிலவி வந்த நிலையில், புடினின் படைகள் 2014ல் கிரிமியாவை இணைத்துக் கொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

வியாழன் அன்று, கிளர்ச்சியாளர்கள் கனரக ஆயுதங்களைப் பயன்படுத்தி 34 போர்நிறுத்த மீறல்களைச் செய்ததாக உக்ரேனியப் படைகள் குற்றம் சாட்டின.  இந்த தாக்குதலில் குறைந்தது இரு படை வீரர்களும் ஐந்து சிவிலியன்களும் காயமடைந்தனர்.

உக்ரைன் மீது படையெடுப்பை நடத்துவதற்காக ரஷ்யா ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளக்கூடும் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்கனவே கூறியுள்ள நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், ரஷ்யா மேலும் இரண்டு அமெரிக்க தூதர்களை வெளியேற்றியது. 

“ரஷ்யா படைகளை வெளியேற்றவில்லை, மாறாக, இன்னும் அதிக படைகளை சேர்த்துள்ளது. ஆகையால் தாக்குதலுக்கான அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது” என்று ஜோ பைடன் கூறினார். 

எல்லையில் ரஷ்யா 100,000 துருப்புக்களை குவித்துள்ளது என்று அமெரிக்கா பல மாதங்களாக கூறி வருகிறது. எனினும், ரஷ்ய அதிபர் புடின் உட்பட ரஷ்ய அதிகாரிகள் உடனடி ரஷ்ய படையெடுப்பு பற்றிய செய்திகளை மறுத்து வருகின்றனர். 

மேலும் படிக்க | Cyber Attack: கத்தியின்றி ரத்தம் சிந்த வைக்கும் சைபர் தாக்குதல்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News