1.10 கோடி மக்கள் பாதிப்பு: ஏற்கனவே மந்த நிலையில் இருந்த பொருளாதாரம், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பல நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இந்த வீழ்ச்சியால் கிழக்கு ஆசியாவில் சுமார் 1.10 கோடி மக்கள் வறுமைக்கு தள்ளப்படுவார்கள் என உலக வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சீனாவில் வூஹான் நகரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பயணம், உலகதின் 202 நாடுகளுக்கு பரவி உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் அனைத்தும் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக பல நாடுகள் லாக்-டவுன் உத்தரவை அமல்படுத்தி உள்ளது. ஏற்கனவே மந்த நிலையில் இருந்த பொருளாதாரம், COVID-19 தாக்கம் காரணமாக அமெரிக்கா, இந்தியா உட்பட உலக நாடுகளின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
இந்த கொடூர கொரோனா வைரசின் தாக்கத்தால் வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ளது. உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலை கொரோனா ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் கொரோனாவால் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சி காரணமாக கிழக்கு ஆசியாவில் சுமார் 1.10 கோடி மக்கள் வறுமையில் சிக்கித் தவிப்பார்கள் என்று உலக வங்கி எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் ஆதித்ய மேட்டூ கூறுகையில், கொரோனா வைரஸ் காரணமாக உலக வணிகம் முடங்கி உள்ளதால், பல நாடுகள் பொருளாதார அச்சுறுத்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இது ஒரு நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதோடு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது.
குறிப்பாக கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியத்தை பொறுத்தவரை, சீனாவை தவிர்த்து, மற்ற நாடுகளின் அடிப்படை வளர்ச்சி 1.3% குறையும். அதேநேரத்தில் விரைவில் இயல்பு நிலை திரும்பும் என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் கொரோனாவால் சீனா கடும் வீழ்ச்சியை சந்திக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.