புதுடெல்லி: இன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, வீடியோ கான்பரன்சிங் Google CEO சுந்தர் பிச்சையுடன் பேசினார். உலகளாவிய தொற்றுநோய் கோவிட் -19, தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பு போன்ற பல முக்கிய விஷயங்கள் குறித்து இருவரும் கலந்தாலோசித்தார்கள்.
இந்த வீடியோ கான்பிரன்சிங் ஆலோசனைக் குறிட்து ட்வீட் செய்து பிரதமர் மோடி தகவல் தெரிவித்தார். "கோவிட் -19 பாதித்த இந்த காலகட்டத்தில் மாறி வரும் புதிய வேலை கலாச்சாரம் (new work culture) பற்றி பேசினோம். உலகளாவிய தொற்றுநோயால் விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள சவால்கள் குறித்தும் நாங்கள் விவாதித்தோம். தரவு பாதுகாப்பு மற்றும் இணைய பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்தும் நாங்கள் பேசினோம்."
கல்வி, கற்றல், டிஜிட்டல் இந்தியா, digital payment-ஐ எவ்வாறு இன்னும் சிறப்பாக மேம்படுத்துவது உட்பட பல விஷயங்கள் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன. பல துறைகளில் கூகுளின் முயற்சிகள் பற்றி மேலதிக தகவல்களை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியடைவதாக பிரதமர் கூறினார்.
இந்திய விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் தொழில்முனைவோரின் வாழ்க்கையை மாற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் குறித்து பிரதமர் மோடியும், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சையும் பேசினார்கள்.
விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும் COVID-19 பற்றிய நம்பகமான தகவல்களை வழங்குவதற்கும் கூகுள் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பிரதமர் மோடிக்கு சுந்தர் விரிவாக எடுத்துரைத்தார்.
பிரதமர் நரேந்திர மோடியின் லாக்டவுன் என்ற வலுவான நடவடிக்கை உலகளாவிய தொற்றுநோய்க்கு எதிரான இந்தியாவின் போரின் மிக வலுவான அடித்தளத்தை அமைத்தது என்று சுந்தர் பிச்சை பாராட்டினார்.
தவறான தகவல்களை எதிர்த்துப் போராடுவதிலும், போலிச் செய்திகளை முடக்குவதிலும், தேவையான முன்னெச்சரிக்கைகள் குறித்தத் தகவல்களைத் தெரிவிப்பதிலும் கூகுள் ஆற்றிய செயல்திறன்மிக்க பங்களிப்பிற்கு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு தெரிவித்தார். சுகாதார சேவைகளை வழங்குவதில் தொழில்நுட்பத்தை மேலும் மேம்படுத்துவது குறித்தும் பிரதமர், கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியிடம் பேசினார்.
இந்தியர்கள் தொழில்நுட்பத்தை விரைவாக ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், விவசாயிகள் தொழில்நுட்பத்தால் பயனடைவது குறித்தும், விவசாயத்தில் செயற்கை நுண்ணறிவு AI (Artificial Intelligence) வழங்கும் பரந்த அளவிலான நன்மைகள் குறித்தும் பேசினார்.
மாணவர்களுக்கும் விவசாயிகளுக்கும் பயன்படுத்தக்கூடிய மெய்நிகர் ஆய்வகங்களின் (virtual labs) யோசனையை பிரதமர் ஆராய்ந்தார்.
இந்தியாவில் கூகுள் அறிமுகப்படுத்திய புதிய தயாரிப்புகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து சுந்தர் பிச்சை பிரதமருக்கு விளக்கினார்.
பெங்களூரில் AI (Artificial Intelligence) ஆராய்ச்சி ஆய்வகம் தொடங்கப்பட்டது குறித்து குறிப்பிட்ட பிச்சை, கூகிளின் வெள்ள முன்கணிப்பு முயற்சிகளின் (Google's flood forecasting efforts) நன்மைகள் பற்றியும் எடுத்துரைத்தார்.
இந்தியாவிற்கென கூகுள் பெரிய முதலீட்டு நிதியத்தைத் தொடங்குவது குறித்து சுந்தர் பிச்சை இன்று அறிவித்திருந்தார். இந்தியாவில் மூலோபாய கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கான கூகுளின் திட்டம் குறித்தும் பிரதமரிடம் அவர் தெளிவுபடுத்தினார்.
மிகவும் வெளிப்படையான மற்றும் அனைவரையும் வரவேற்கும் பொருளாதாரங்களில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் மோடி குறிப்பிட்டார். விவசாயத்தை சீர்திருத்துவதற்கு அரசாங்கம் அண்மையில் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்தும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான பிரச்சாரம் குறித்தும் அவர் பேசினார். மேலும், திறமைகளை காலத்திற்கு ஏற்ப சீரமைப்பது மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தையும் பிரதமர் எடுத்துரைத்தார்.