காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் தொடர்ந்து உண்மை செல்லாமல் மறைக்கும் தமிழக அரசு இன்றே ராஜினாமா செய்ய வேண்டும் என திராவிட முன்னேற்ற கழகம் செயல் தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து தனது முகநூலில் ஸ்டாலின் அவர்கள் கூறியதாவது:-
இன்று (10-04-2018) காவிரி உரிமை மீட்பு பயணத்தின் நான்காம் நாளினை, தலைவர் கலைஞர் அவர்களை ஈன்றெடுத்த திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கினேன். துர்காலயா ரோடு, பவித்திரமாணிக்கம் பகுதிகள் வழியாக சென்று தேவர்கண்டநல்லூர் பகுதியில் பெருந்திரளாக எழுச்சியோடு கூடியிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களை சந்தித்து பேசினேன்.
மக்கள் இன்றைக்கு அரசியலை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, கட்சி பாகுபாடு பார்க்காமல், எல்லோருக்கும் பொதுவான ஒரு பிரச்சினையாக உள்ள காவிரி விவகாரத்தை நம்முடைய வாழ்வாதாரப் பிரச்சினை என்பதை உணர்ந்து ஒன்று திரண்டு கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், மக்களிடமும், எதிர்க்கட்சிகளான எங்களிடமும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றும், பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர்ந்து உறுதி தந்து கொண்டிருந்தார்.
ஆனால், இன்றைக்கு மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அவர்கள், “பிரதமரை சந்திக்க வேண்டுமென்று தமிழக அரசிடமிருந்தோ, முதலமைச்சரிடம் இருந்தோ, துணை முதலமைச்சரிடம் இருந்தோ எந்தக் கோரிக்கையும் வரவில்லை”, என்று வெளிப்படையாக சொல்லியிருக்கிறார்.
இந்தச் செய்தி தவறு என்றால், முதல்வரோ, துணை முதலமைச்சரோ, அரசின் சார்பில் ஏன் மறுக்கவில்லை என கேள்வியெழுப்பினேன். ஆனால், அதை செய்ய தைரியம் இல்லை என்றால், இன்றைக்கே ராஜினாமா செய்துவிட்டு செல்ல வேண்டுமென்றேன்.