காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரை காவல்துறையினர் விடுவித்தனர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட ஸ்டாலின் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் சென்னை புரசைவாக்கத்தில் உள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.
இந்நிலையில், ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது இதுவரை இல்லாத அளவிற்கு முழு அடைப்பு போராட்டம் 100% வெற்றி அடைந்துள்ளது. தமிழகம் முழுவதும் சுமார் 10 லட்சம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
காவிரி விவகாரத்தில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து நாளை அனைத்துக்கட்சி கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார். போராட்டத்தை முன்னெடுத்து செல்வது குறித்து நாளை ஆலோசனை நடத்தப்படும் என்றார்.
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டபடி, காவிரி உரிமை மீட்பு பயணம் வரும் 7-ம் தேதி திருச்சியில் தொடங்கும். இந்த பயணம் கடலூரில் முடியும். இதில், அனைத்து கட்சி தலைவர்களும் கலந்துகொள்வர். இந்த பயணம் தொடர்பாக நாளைய கூட்டத்தில் விவாதித்து நாளை அறிவிக்கப்படும் என ஸ்டாலின் தெரிவித்தார்.
இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததை கண்டித்து சென்னையில் மறியலில் ஈடுபட்டு கைதான ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். கி.வீரமணி, திருநாவுக்கரசர், திருமாவளவன், ஜவாஹிருல்லா ஆகியோர் விடுவிக்கப்பட்டனர். திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.