ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி முதல்வர் சந்திரபாபு நாயுடு பலமுறை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அதை மத்திய அரசு ஏற்காததால் பாஜக கூட்டணியில் இருந்து தெலுங்கு தேசம் கட்சி விலகியது. அதைத் தொடர்ந்து நடந்த அமளிகளால் பாராளுமன்றத் தொடர் முடங்கிப் போனது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடி உட்பட பல பாஜகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர்.
இந்நிலையில், குண்டூர் மாவட்டத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா நடந்தது. அதில் கலந்துக் கொண்ட ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது:
முறையான திட்டம் வகுக்காமல் ஒருங்கிணைந்த ஆந்திராவை பிரித்த காரணத்தினால் தற்போது ஆந்திர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். மத்திய அரசு தொடர்ந்து ஆந்திரா மீது அலட்சிய போக்கை காட்டி வருகிறது.
இதில் எதிர்க்கட்சிகள் சுய லாபத்துக்காக அரசியல் செய்கின்றன. நம்பிக்கை துரோகத்தை கண்டித்தும் மாநில பிரிவினை மசோதாவில் அறிவித்த 19 அம்சங்களை அமல்படுத்த கோரியும் வரும் 20-ம் தேதி என்னுடைய பிறந்த நாளன்று மத்திய அரசை கண்டித்து உண்ணாவிரதம் நடத்த உள்ளேன்.
எங்களுக்கு குஜராத் போன்ற சிறப்பான தலைநகர் தேவை இல்லை. ஆந்திராவுக்கு சட்டப்படி தர வேண்டிய சிறப்பு அந்தஸ்தை தந்தாலே போதும்" என தெரிவித்துள்ளார்.