அட்சய திருதியை தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். முதல் யுகமான கிருதயுகத்தில் பிரம்மனால் உலகம் தோற்றுவித்த நாள் அட்சய திருதியை ஆகும்.
இந்து புராணங்களில் குறிப்பிடப்படும் முனிவரான பரசுராமரின் பிறந்த நாளாகவும் அட்சய திருதியை கொண்டாடப்படுகிறது. அட்சய திருதியை நாளில் திரேதா யுகம் தொடங்கியது, மேலும் பகீரதன் தவம் செய்து இந்தியாவின் மிகப் புனிதமான புண்ணிய நதியான கங்கை நதி சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரவழைத்தது இந்நாளில்தான் எனக் கூறப்படுகிறது.
சமணர்களை பொறுத்தவரை தீர்த்தங்கரர்களுள் ஒருவராகிய ரிசபதேவரின் நினைவாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
"அட்சயா" எனும் சொல் சமசுகிருதத்தில் எப்போதும் குறையாதது எனும் பொருளில் வழங்கப்படுகிறது. இந்த நாள் நல்ல பலன்களையும் வெற்றியையும் தரும் என்று நம்பப்படுகிறது. தங்கம், வெள்ளி, அவற்றினால் செய்யப்பட்ட நகைகள், வைரம் மற்றும் இதர விலைமதிப்பற்ற கற்கள் மற்றும் வீடு-மனைகள் போன்றவற்றை வாங்க உகந்த நாளாகவும் கருதப்படுகிறது அட்சய திருதியை.
அட்சய திருதியை நவன்ன பர்வம் எனவும் அழைக்கப்படுகிறது. அட்சய திருதியை ரோஹிணி நட்சத்திரத்துடன் வரும் நாள் மிக மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. இந்து இதிகாசப்படி, அட்சய திருதியை நாளன்றே வேதவியாசர் மகாபாரத இதிகாசத்தை விநாயகரிடம் எழுதச் சொல்லி கட்டளையிட்டார்.
பாஞ்சாலியின் மானம் காக்க, கண்ணன் ’அட்சய’ என்று கூறி பாஞ்சாலியின் ஆடையை வளரச் செய்ததும் அட்சய திருதியை நாளன்றுதான்.
காசியில் அன்னபூரணித் தாயாரிடமிருந்து, சிவபெருமான் தமது பிட்சைப் பாத்திரம் நிரம்பும் அளவு உணவைப் பெற்றதும் அட்சய திருதியை அன்றுதான்.
செல்வத்திற்கு அதிபதியான குபேரரே செல்வமிக்க கடவுள் என நம்பப்படுகிறார். இந்த நாளில் குபேரர் கூட விஷ்ணுவின் மனைவியும் செல்வத்திற்கான தெய்வமான லட்சுமியை வணங்குவார் என லட்சுமி தந்தரம் எனும் நூல் கூறுகிறது. இந்த நாளில், குபேர லட்சுமி பூசை நடத்தப்படுகிறது. அதில் லட்சுமி உருவப்படத்துடன் குபேரரின் அடையாளமான சுதர்சன குபேர எந்திரமும் ஒன்றாக வைக்கப்பட்டு வணங்கப்படுகிறது.