தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையினை மூட தமிழக அரசு அரசாணை பிரப்பித்ததை அடுத்து இன்று ஸ்டர்லைன் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது!
இந்த நடவடிக்கை வெறும் கண்துடைப்பு தான் எனவும், நாளை நடைப்பெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தினில் தூத்துக்குடியில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு குறித்து கேள்வி எழுப்பப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது...
"தூத்துக்குடியில், 99 நாட்கள் நடைபெற்ற மக்களின் போராட்டத்தை வேடிக்கை பார்த்துவிட்டு, 100 வது நாளில் 13 உயிர்களை மனிதநேயமற்ற முறையில் சுட்டுக்கொல்லும் முன்பே, ஸ்டெர்லைட் ஆலையை மூடும் அறிவிப்பை வெளியிட்டிருந்தால், அதிமுக அரசுக்கு ஆலையை மூட வேண்டும் என்ற நல்லெண்ணம் இருக்கிறது என்று கருதி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வரவேற்கலாம்.
ஆனால், 13 பேரை கொன்றுவிட்டு, பல நூற்றுக்கணக்கான மக்களை படுகாயப்படுத்தி, மருத்துவமனையில் படுக்கவைத்து விட்டு, திடீரென்று போராட்டக்காரர்கள் சந்தித்தாகவும், அதனால் ஆலையை மூடும் முடிவை எடுத்திருப்பதாகவும் அரசாணை வெளியிட்டிருப்பதில் உள்நோக்கம் இருக்கிறது.
அமைச்சரவையைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி இந்த அரசாணையை வெளியிடவில்லை. உரிய சட்டமுறைகளின்படியும் மூடியதாகத் தெரியவில்லை. சட்டமன்ற கூட்டத்தொடர் வருகிறது என்பதற்காக அள்ளித்தெளித்த கோலத்தில் ஒரு ஆணையை வெளியிட்டிருக்கிறார்கள்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆட்சிக்காலத்தில், 2013-ல் இதேபோன்று ஆலையை மூடி கண்துடைப்பு நாடகத்தை நடத்தினார். பிறகு, அதே ஆலையை ஆய்வுசெய்த மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர் செயலாளர், "ஆலை பாதுகாப்பாக இருக்கிறது", என்று அறிக்கை கொடுத்தார்.
அதனால் ஆலையை மீண்டும் திறக்க தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டது. “நாங்கள் மூடுவது போல் மூடுகிறோம். நீங்கள் நீதிமன்றம் சென்று உத்தரவை பெற்று ஆலையை திறந்து கொள்ளுங்கள்”, என்ற கண்துடைப்பு நாடகத்தை அன்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அம்மையாரும் நடத்தினார். இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் எடப்பாடி பழனிச்சாமியும் அதே நாடகத்தை நடத்தியிருக்கிறார்.
ஆலையின் பாதிப்புகளை அரசு ஆணையில் பட்டியலிடாமல், மூட உத்தரவிட்டிருப்பதிலும் உள்நோக்கம் இருக்கிறது. அரசியல் சட்டத்தில் உள்ள “டைரக்டிவ் பிரின்ஸிபிள்” பிரிவு 48-A-யின் கீழ் நடவடிக்கை எடுத்திருப்பதிலும் அரசிற்கு இந்த ஆலையை நிரந்தரமாக மூடும் அளவிற்கு, ஒரு உறுதியான இறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நினைப்பு இருப்பதாக தெரியவில்லை.
ஏனென்றால், இந்தப் பிரிவின்கீழ் எடுக்கப்படும் நடவடிக்கைகளை இதுவரை, “சுற்றுப்புறச் சூழல் மட்டுமின்றி நிலையான வளர்ச்சியையும்” (Sustainable Development) கணக்கில் எடுத்துக்கொண்டே தீர்ப்பு வழங்கப்பட்டு இருக்கிறது.
இன்னும் சொல்வதென்றால், 2.4.2013 அன்று ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே இந்த அடிப்படையில்தான் என்பதை அவசரமாக ஆணை வெளியிட்ட முதலமைச்சருக்கு அதிகாரிகள் யாரும் சொல்லவில்லை என்றே நினைக்கிறேன்.
ஆகவே, ஆலையை மூடுவது என்பது முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியின் கண்துடைப்பு நாடகம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, இந்த நாடகத்தை உடனடியாக கைவிட்டு, அமைச்சரவையைக் கூட்டி ஸ்டெர்லைட் ஆலை தேவையில்லை என்று தீர்மானம் நிறைவேற்றி, அதனடிப்படையில் அரசு ஆணை வெளியிட்டால் மட்டுமே ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கான நிரந்தரத் தீர்வாக அமையும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதில் முதலமைச்சருக்கு உண்மையிலேயே நல்லெண்ணம் இருக்கிறது என்றால், துப்பாக்கிச்சூடு நடத்திய எஸ்.பி. முதல் டி.ஜி.பி. வரை அனைவர்மீதும் கொலை வழக்குப்பதிவு செய்து, அவர்களை பணியிலிருந்து நீக்கி, கைது செய்ய வேண்டும் என்றும், துப்பாக்கிச் சூட்டிற்கும், 100 நாட்கள் போராட்டத்தை வேடிக்கை பார்த்ததற்கும் பொறுப்பேற்று முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிசாமியும் ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.