புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா? -கனிமொழி கண்டனம்!

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா? என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்!

Updated: Jul 7, 2019, 01:04 PM IST
புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா? -கனிமொழி கண்டனம்!

தமிழக மக்களின் வரிப்பணத்தில் வாங்கிய புதிய பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லையா? என திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்!

இதுதொடர்பாக அவர்  தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது., "தமிழக மக்களின் வரிப்பணத்தில் புதிதாக வாங்கியிருக்கும் பேருந்துகளில் தமிழுக்கு இடமில்லை. மத்திய அரசின் இந்தி திணிப்பு ஒருபுறம் என்றால், நாங்களும் அவர்களுக்கு சளைத்தவர்கள் அல்ல என்று இந்தியை திணிக்கும் அதிமுக அரசுக்கு கடும் கண்டனம்" என குறிப்பிட்டுள்ளார்.

இந்த பதிவுடன் தமிழக அரசு பேருந்தில் EMERGENCY, FIRE EXTINGUISHER  என ஆங்கிலம், இந்தி மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்நிலையில் ஆங்கிலம், இந்தி மொழில் மட்டுமே உள்ள அறிவிப்பு பலகைகளை அகற்ற வேண்டும் எனவும் கனிமொழி, தமிழக அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய நிதிநிலை அறிக்கை குறித்து தனது கருத்தை பதிவு செய்திருந்த கனிமொழி அவர்கள்., "மத்திய நிதிநிலை அறிக்கையில் சாமானிய மக்களுக்கான எந்த தெளிவான அறிவிப்புகளும் இல்லை. நிறைவேற்றியிருப்பதாக மக்களவையில் நிர்மலா சீதாராமன் கூறியிருப்பது தேடக்கூடிய அளவில்தான் உள்ளது என தெரிவித்திருந்தார்.

மேலும், தூய்மை இந்தியா திட்டம், ஏழை மக்களுக்கு வீடு கட்டிக் கொடுத்தது உள்ளிட்ட எந்தத் திட்டமாக இருந்தாலும், மத்திய அரசு குறிப்பிட்ட புள்ளி விவரங்களுக்கும், உண்மைக்கும் இடையே அதிக இடைவெளி இருக்கிறது எனவும் தெரிவித்திருந்தார் என்பகு குறிப்பிடத்தக்கது.