டெல்லி: கடந்த மாதம் ஏப்ரல் 11 ஆம் தேதி தொடங்கி ஏழு கட்டங்களாக நடைபெற்ற 2019 மக்களவை தேர்தல் நேற்றுடன் (மே 19) முடிந்தது. மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் தேர்தல் நடைபெறாத ஒரே ஒரு தொகுதி வேலூர் தொகுதி ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
மக்களவை தேர்தல் நடந்து முடிந்தவுடன் அனைத்து ஊடகங்களும் கருத்து கணிப்புகளை வெளியிட்டன. அதில் பெரும்பாலும் பாஜக-வின் கை ஓங்கி இருப்பதையே ஊடங்களின் கருத்து கணிப்பு ஆகா இருந்தது. அதுவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 300-க்கு அதிகமான இடங்களை கைப்பற்றும் என கருத்து கணிப்புக்கள் வெளியானது. அதேவேளையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக்கு 117 இடங்களும், மற்றவர்கள் 117 இடங்களைப் பெறுவார்கள் எனவும் கூறப்பட்டு இருந்தது.
இதனால் எதிர்கட்சியினர் பெரும் கலக்கம் அடைந்தனர். அதே நேரத்தில் உத்தரபிரதேசம், பீகார், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை மாற்ற முயற்சிகள் நடப்பதாக சமூகவலைதளங்களில் சில வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.
இதனையடுத்து, நேற்று சந்திரபாபு நாயுடு தலைமையில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 22 மாநில கட்சிகளை ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்திய பின்னர், தேர்தல் ஆணையத்திடம் ஒரு மனு அளித்தனர். அதில், முதலில் 5 விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்றும், வாக்கு எண்ணிக்கையின் போது ஏதேனும் ஒரு வாக்குச்சாவடியில் பதிவான வாக்குகளில் முரண்பாடுகள் ஏற்ப்பட்டால், அந்த சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பதிவான வாக்குகளையும் ஒப்புகை சீட்டுகளுடன் 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர்.
எதிர்கட்சிகளின் கோரிக்கை ஏற்க்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் முதலில் விவிபேட் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை நிராகரித்து உள்ளது.