பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து விலகும் முதல்வர்?

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து பிகாரை தவிர மற்ற மாநிலங்களில் விலகுவதாக ஐக்கிய ஜனதா தள் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்!

Updated: Jun 9, 2019, 04:20 PM IST
பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து விலகும் முதல்வர்?

பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் இருந்து பிகாரை தவிர மற்ற மாநிலங்களில் விலகுவதாக ஐக்கிய ஜனதா தள் தலைவரும், பிகார் முதல்வருமான நிதிஷ் குமார் அறிவித்துள்ளார்!

மேலும் எதிர்வரும் சட்டமன்ற தேர்தல்களில் தனித்து போட்டியிட இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட், ஜம்மு காஷ்மீர், ஹரியாணா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தற்போது இந்த அறிவிப்பினை நிதிஷ் குமார் வெளியிட்டுள்ளார். 

பிகார் மாநிலத்தில் மட்டும் பாஜக தலைமையிலான NDA கூட்டணியில் ஐக்கிய ஜனதா தள் தொடரும் எனவும், இந்த முடிவு ஐக்கிய ஜனதா தள தேசிய காரிய கமிட்டியில் எடுக்கப்பட்ட முடிவு எனவும் கட்சி தலைமை தெரிவித்துள்ளது.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய காரிய கமிட்டி நடைப்பெற்றது. இந்த கூட்டத்தில் ஐக்கிய ஜனதா தள MLA-க்கள், MLC-க்கள், MP-க்கள் மற்றும் கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். கூட்டத்தின் பின்னர் இந்த அதிரடி முடிவு குறித்து கட்சி தலைமை வெளியிட்டுள்ளது.

மேலும் கட்சியை பலப்படுத்தும் விதமாக நாடுமுழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காரிய கமிட்டி முடிவு செய்திருப்பதாகவும், விரைவில் பொதுக்கூட்டம் நடத்துவது தொடர்பான அறிவிப்பை நிதிஷ் குமார் வெளியிடுவார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் நடைப்பெற்ற மக்களவை தேர்தலில் பாஜக - ஜனதா தள கூட்டணி பிகாரில் 40-க்கு 39 இடங்கள் வென்று நாட்டு மக்களின் கவணத்தை ஈர்த்தது. இதில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 16 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் மத்திய அமைச்சரவையில் ஜனதா தளத்திற்கான இடம் வெற்றிடமாகவே இருந்தது. இது குறித்து கருத்து தெரிவித்த நிதிஷ் குமார்., பரஸ்பர உடன்படிக்கையின் படி தங்களுக்கு அமைச்சர் பதவி வேண்டாம் என விட்டுகொடுத்தாக அறிவித்தார். எனினும் இந்த அறிவிப்பு அமைச்சர்கள் பதவியேற்பு விழாவிற்கு 30 நிமிடங்கள் முன்னதாகவே வெளியானது. இந்நிலையில் தற்போது நிதிஷ் குமார் கூட்டணி முறிவு குறித்த அறிவித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.