குஜராத்தில் இந்த முறையும் 26 மக்களவைத் தொகுதிகளையும் 2வது முறையாகக் கைப்பற்றுகிறது பாஜக.
நாடுமுழுவதும் கடந்த ஏப்ரல் மாதம் 11-ஆம் தேதி தொடங்கி கடந்த 19-ஆம் தேதி வரை 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்றது. தமிழகத்தின் வேலூர் தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து 542 தொகுதிகளுக்கான தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
ஆரம்ப முதலே அதிக இடங்களில் முன்னணி வகித்த பாஜக 350 இடங்களில் முன்னணி பெற்று மத்தியில் மீண்டும் பாரதிய ஜனதா ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 92 இடங்களிலும், மற்றவை 100 இடங்களில் முன்னணியில் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 26 இடங்களையும் பாஜக கைப்பற்றிய நிலையில், 2வது முறையாகவும் 26 இடங்களையும் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரசின் சவேடாவைக் காட்டிலும் 5 லட்சம் வாக்குகள் முன்னிலையில் உள்ளார்.