உங்கள் குடும்ப அட்டை இன்னும் ஆதார் அட்டையுடன் இணைக்கப்படவில்லை என்றால்... கவலை இல்லை. இரண்டு அட்டைகளையும் இணைக்கும் பணி தற்போது செம்டம்பர் இறுதி வரை நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே அட்டைகள் செயலிழக்காது எனவும், கொரோனா முழு அடைப்பு காலத்திலும் தங்கள் குடும்ப அட்டைகளை பயன்படுத்தி உணவு தானியங்களை மக்கள் தொடர்ந்து பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது விநியோக முறை (PDS)-ன் கீழ் பயனாளிகளின் குடும்ப அட்டை எதுவும் ரத்து செய்யப்படமாட்டாது அல்லது ஆதார் எண்ணை வைத்திருக்காத காரணத்தினால் பயனாளிகளின் பெயர் நீக்கப்படாது என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஆதார் எண் இல்லாதவர்களின் குடும்ப அட்டைகள் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் அரசின் இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் அமைச்சகம் தெளிவான அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது, எந்தவொரு உண்மையான பயனாளிக்கும் உணவு தானியங்களின் ஒதுக்கீட்டில் இருந்து மறுப்பு தெரிவிக்க கூடாது எனவும் இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. "ஆதார் எண்ணை வைத்திருக்காத காரணத்தால் மட்டுமே அவர்களின் பெயர்கள் / குடும்ப அட்டைகளில் இருந்து நீக்கப்படக்கூடாது / ரத்து செய்யப்படக்கூடாது" என்று அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், பயனாளியின் ஆதார் அங்கீகாரத்தில் தோல்வி, பயனாளியின் மோசமான பயோமெட்ரிக்ஸ், நெட்வொர்க் / இணைப்பு / இணைப்பதில் உள்ள சிக்கல்கள் அல்லது வேறு ஏதேனும் தொழில்நுட்ப காரணங்களால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் (NFSA) கீழ் உணவு தானியங்கள் மறுக்கப்படாது என்று அறிவுறுத்தல்கள் தெரிவிக்கின்றன.
NFSA-ன் கீழ், மத்திய அரசு ஒரு நபருக்கு 5 கிலோ உணவு தானியங்களை சுமார் 80 கோடி மக்களுக்கு ஒரு கிலோவுக்கு தலா 2-3 என்ற உயர் மானிய விலையில் வழங்குகிறது. முழு அடைப்பின் போது நிவாரணம் வழங்க, மத்திய அரசு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியங்களை இலவசமாக வழங்குகிறது. இது ஜூன் வரை மூன்று மாத காலத்திற்கு நீடிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள 23.5 கோடி குடும்ப அட்டைகளில் கிட்டத்தட்ட 90% ஏற்கனவே ரேஷன் ஆதார் எண்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. (அதாவது குடும்பத்தில் ஒரு உறுப்பினராவது). 80 கோடி பயனாளிகளில் கிட்டத்தட்ட 85% பேர் அந்தந்த ரேஷன் கார்டுகளுடன் தங்கள் ஆதார் எண்ணை பதிவு செய்துள்ளனர்.
ஏழை மற்றும் புலம்பெயர்ந்த பயனாளிகளின் நலனைப் பாதுகாப்பதற்காக 'ஒன் நேஷன் ஒன் ரேஷன் கார்டு' திட்டத்தின் கீழ் NFSA ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களின் மாநிலங்களுக்கிடையேயான பெயர்வுத்திறனை செயல்படுத்தவும் அரசாங்கம் தொடங்கியுள்ளது.
"ஒரு ரேஷன் கார்டின் தடையற்ற இடை-மாநில பெயர்வுத்திறன் பரிவர்த்தனைகளை அடைவதற்கு, NFSA இன் கீழ் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் UT களின் தனித்துவமான ரேஷன் கார்டுகள் / பயனாளிகளின் தரவைப் பராமரிப்பதற்கான மையப்படுத்தப்பட்ட களஞ்சியத்தை வைத்திருப்பது அவசியம்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஆகையால், நாட்டில் ஒவ்வொரு ரேஷன் கார்டு வைத்திருப்பவர் மற்றும் பயனாளியின் தனித்துவமான பதிவை நிறுவுவதில் ஆதார் எண்களை இணைப்பது முக்கியமானது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.