வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்!

Last Updated : Jun 11, 2017, 08:58 AM IST
வருமான வரி தாக்கல் செய்ய ஜூலை 1 முதல் ஆதார் கட்டாயம்! title=

ஜூலை 1-ம் தேதி முதல் வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண் கட்டாயம் என்று மத்திய நேரடி வரிகள் விதிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

பான் அட்டைகள் கோரி விண்ணப்பிப்பதற்கு ஆதார் எண் கட்டாயம் என்ற வருமான வரிச் சட்டத்தின் ஷரத்து சட்டரீதியாக செல்லுபடியாகும் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. எனினும், ஆதார் இல்லாதவர்களும் வருமான வரி தாக்கல் செய்யலாம் என்றும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், இத்தீர்ப்பின் மூன்று அம்ச விளைவுகள் தொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஜூலை 1-ம் வரும் தேதியிலிருந்து ஒவ்வொரு நபரும் தங்களது வருமான வரிக் கணக்குகளைத் தாக்கல் செய்வதற்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிப்பதற்கும் ஆதார் எண்ணைக் குறிப்பிடுவது அல்லது ஆதார் திட்டத்தில் பதிவு செய்ததற்கான எண்ணைக் குறிப்பிடுவது கட்டாயமாகும்.

இந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி நிலவரப்படி பான் எண் ஒதுக்கீட்டைப் பெற்றவர்கள் தங்களது ஆதார் எண்ணையோ அல்லது ஆதார் பதிவுக்கான எண்ணையோ வருமான வரித்துறை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும். பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்காக இதை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்.

ஆதார் எண் இல்லாதவர்களுக்கும், ஆதார் அட்டை பெற விரும்பாதவர்களுக்கும் பான் அட்டை ரத்து செய்யப்படாது என்ற தாற்காலிக நிவாரணத்தை மட்டுமே சுப்ரீம் கோர்ட் அளித்துள்ளது. இது வருமான வரிச் சட்டத்தின்படி பான் எண்ணைக் குறிப்பிடத் தவறியதற்காக எந்த விளைவும் ஏற்படக் கூடாது என்பதற்காக இந்தச் சலுகையை நீதிமன்றம் அளித்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளிக்கை:-

பான் எனப்படும் நிரந்தரக் கணக்கு எண் ரத்து செய்யப்பட்டால் ஒரு நபரால் வழக்கமான வங்கி மற்றும் நிதிச் செயல்பாடுகளை மேற்கொள்ள இயலாமல் போய்விடும். எனவே மேற்கண்ட நிவாரணம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், வரும் ஜூலை 1 முதல் வருமான வரிக் கணக்கு தாக்கலுக்கும், பான் அட்டை கோரி விண்ணப்பிக்கவும் ஆதார் கட்டாயமாகும் என்றார்.

இந்த விவகாரம் குறித்து உயரதிகாரிகள் கூறுகையில், சுப்ரீம் கோர்ட் வெள்ளிக்கிழமை அளித்த தீர்ப்பை மத்திய சட்ட அமைச்சகம், நிதி அமைச்சகம், மத்திய நேரடி வரிகள் வாரியம், வருமான வரித்துறை ஆகியவற்றின் உயரதிகாரிகள் பரிசீலித்தனர். அதன் பிறகே மேற்கண்ட விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்.

Trending News