காஷ்மீர் விவகாரத்தில் ட்ரம்ப் கூறிய கருத்தை இந்தியா மறுத்த நிலையில், அமெரிக்கா இந்தியாவுடன் நல்ல உறவை கொண்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது!
வெள்ளை மாளிகையின் ஆலோசகர் கெல்யான் கான்வே நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் அதிபர் ட்ரம்பின் கருத்தை இந்தியா மறுத்துள்ளது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய அவர் தாங்கள் மிகவும் நல்ல மற்றும் வளர்ந்துவரும் உறவை இந்திய அரசுடனும், நரேந்திர மோடியிடமும் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.
முன்னதாக இந்த வாரத்தின் தொடக்கத்தில் அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், அதிபர் ட்ரம்பை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய ட்ரம்ப், இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் காஷ்மீர் பிரச்சனைக்கு மத்தியஸ்தம் செய்ய இம்ரான் கான் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தார். மேலும் இந்திய பிரதமர் மோடியும் கடந்த மாதம் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டில் தன்னிடம் கோரிக்கை விடுத்ததாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்பின் இந்த கருத்துக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உடனடியாக மறுப்பு தெரிவித்தார். மேலும் பிரதமர் மோடி ஒருபோதும் ட்ரம்பிடம் காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதித்தது இல்லை எனவும், மத்திய அரசு இந்த விவகாரத்தை இரு நாட்டு பிரச்சனையாக மட்டுமே கருதுவதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.