புது டெல்லி: கொரோனா வைரஸ் அதிக அளவில் பரவி வருவதால், அதை கருத்தில் கொண்டு மார்ச் 31 ஆம் தேதி வரை தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மத்திய கல்வி அமைச்சகம் புதன்கிழமை அன்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் நாட்டின் அனைத்து கல்வி நிறுவனங்களையும் கேட்டுக்கொண்டது.
கல்வி தேர்வு அட்டவணையை பராமரிப்பது முக்கியமானது என்றாலும், பல்வேறு தேர்வுகளில் கலந்துக்கொள்ளும் மாணவர்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது என்று மனிதவள மேம்பாட்டு செயலாளர் அமித் கரே அதிகாரப்பூர்வ தகவல்தொடர்பு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
"சிபிஎஸ்இ (Central Board of Secondary Education) வாரியத் தேர்வுகள் உட்பட தற்போது நடைபெற்று வரும் அனைத்து தேர்வுகளும் மார்ச் 31 ஆம் தேதி வரை ஒத்தி வைக்கப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் அதுக்குறித்து மறுபரிசீலனை செய்யப்படும்" என்று அவர் மேலும் கூறினார்.
பல்கலைக்கழக மானியக் கமிஷன் (UGC), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (AICTE), தேசிய திறந்த பள்ளி கல்வி நிறுவனம் (NIOS) மற்றும் கூட்டு நுழைவுத் தேர்வு (JEE Main) ஆகிய அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்வுகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.