புதுடெல்லி: உ.பி. உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தலுக்கு பிந்தையக் கருத்து கணிப்பு வெளியானது. இந்த கருத்து கணிப்பில் பாரதிய ஜனதாவிற்கு வெற்றி முகம் தெரிகிறது. பஞ்சாபில் முதன் முறையாகப் போட்டியிட்ட ஆம் ஆத்மி மற்றும் அதன் எதிர்கட்சியான காங்கிரஸுக்கும் இடையில் இழுபறி நிலை வெளியாகி உள்ளது.
கடந்த பிப்ரவரி 5 முதல் மார்ச் 8-ம் தேதி வரை என ஐந்து மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் முடிவடைந்துள்ளது.
டைம்ஸ் நவ்-விஎம்ஆர் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கணிப்பில் உபியில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜகவிற்கு 190 முதல் 210 வரை கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இங்கு ஆளும் சமாஜ்வாதிக்கும் அதனுடன் கூட்டணி சேர்ந்த காங்கிரஸிற்கும் 110-130 மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜுக்கு 54-74 தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறியுள்ளது. சமாஜ்வாதி-காங்கிரஸுக்கு 120, பகுஜன் சமாஜுக்கு 90 மற்றும் மற்ற கட்சிகளுக்கு 9 கிடைக்கும் எனக் கணித்துள்ளது.
ஏபிபி நியூஸ்-லோக்நித் கணிப்பின்படி பாஜகவிற்கு 164-176, சமாஜ்வாதி-காங்கிரஸ் கூட்டணிக்கு 133-169 மற்றும் பகுஜன் சமாஜ் 46-70 தொகுதிகள் கிடைக்கின்றன. இந்தியா டிவி-சி வோட்டர்ஸ் வெளியிட்ட கணிப்பில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காமல் தொங்குசபை ஏற்படும் எனக் கூறியுள்ளது.
இந்தியா டிவி-சி வேட்டர்ஸ் உத்தராகண்டிலும் தொங்குசபை வரும் எனக் கணித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் நியூஸ் 24-டுடேஸ் சாணக்யா கணிப்பில் பாஜகவிற்கு தனிமெஜாரிட்டியாக 53 கிடைக்கும் எனக் கூறியுள்ளது. காங்கிரஸிற்கு 15-ம் மற்றவர்களுக்கு வெறும் இரண்டும் அதில் கணிக்கப்பட்டுள்ளது.
கோவாவில் இந்தியா டிவி-சி வேட்டர்ஸ் சார்பில் கோவாவில் மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் பாஜக கூட்டணிக்கு 15-21, காங்கிரஸ் 12-18, ஆம் ஆத்மி 4 மற்றும் இதர கட்சிகளுக்கு 2-8 தொகுதிகள் கணிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்திற்காக இந்தியா டிவி-சி வோட்டர்ஸ் கணிப்பின்படி பாஜக 25-31 காட்டியுள்ளது. எனினும் அதற்கு தனிமெஜாரிட்டி கிடைக்கும் என உறுதியாகக் கூறவில்லை. இதில், காங்கிரஸ் 17-23 மற்றும் இதர கட்சிகளுக்கு 9-15 கிடைக்கும் எனக் கூறியுள்ளது. இதனால், தொடர்ந்து மூன்றாவது முறையாக மணிப்பூரின் காங்கிரஸ் முதல்வராக இருக்கும் ஒக்ராம் இபோபிக்கு நான்காவது வாய்ப்பு கிடைப்பது கடினம்.
பாஜக ஆதரவுடன் அகாலிதளம் கட்சி பஞ்சாபில் ஆட்சி செய்கிறது. இங்கு மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் அதற்கு மறுவாய்ப்பு கிடைக்காது என கணிப்புகள் வெளியாகி உள்ளன. இந்தியா நியூஸ்-எம்ஆர்சியின் கணிப்புகளில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு சரிசமமாக 55 தொகுதிகள் காட்டியுள்ளன. இதேபோல், டுடேஸ் சாணக்யாவில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மிக்கு சரிசமமாக 54 தொகுதிகள் காட்டியுள்ளது. இதனால், பஞ்சாபில் அவ்விரு கட்சிகளுக்கு இடையே இழுபறி நிலை உள்ளது. ஆளும் பாஜக-அகாலிதளம் கூட்டணிக்கு வெறும் 7 மற்றும் இதர கட்சிகளுக்கு 2-ம் கணிக்கப்பட்டுள்ளன.
இதே மாநிலத்திற்கு இந்தியா டுடே-ஆக்சிஸ் வெளியிட்ட கணிப்பில் காங்கிரஸுக்கு தனி மெஜாரிட்டியாக 62-71-ம் ஆம் ஆத்மிக்கு இரண்டாவது நிலையில் 42-51 தொகுதிகளும் கிடைக்கும் எனக் கூறப்பட்டுள்ளது. பாஜக-அகாலிதளம் 4-7 மற்றும் இதர கட்சிகளுக்கு ஒன்றும் இல்லை. சி வேட்டர்ஸின் கணிப்பில் காங்கிரஸுக்கு தனிமெஜாரிட்டியாக 63, ஆம் ஆத்மிக்கு 45 மற்றும் பாஜக-அகாலிதளம் கூட்டணிக்கு வெறும் 9 தொகுதிகள் அளித்துள்ளன.
ஆம் ஆத்மி கட்சிக்கு டெல்லிக்கு பின் முதன்முறையாக மற்றொரு மாநிலமாக பஞ்சாபில் கால் ஊன்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இக்கட்சி இந்தமுறை பஞ்சாபுடன் சேர்த்து கோவாவிலும் பலத்த எதிர்பார்ப்புடன் போட்டியிட்டது.
இந்த 5 மாநிலங்களின் சட்டப்பேர்வை தேர்தல் முடிவுகள் மார்ச் 11-ம் தேதி வெளியாகிறது.